
சிலாங்கூர்: தீபாவளியை முன்னிட்டு ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சியை ஆர்டிஎம் மற்றும் ஆஸ்ட்ரோ முதன்முறையாக இணைந்து தயாரித்து வரலாறு படைத்துள்ளன.
“தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம்” எனும் இந்த இசை நிகழ்ச்சி, கலாச்சாரம், சமூகத்தைக் கொண்டாட பொது மற்றும் தனியார் ஒளிபரப்புத் துறைகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பைக் குறிக்கிறது.
“முதலில் ஆஸ்ட்ரோ இந்த யோசனையை எனது அலுவலகத்திற்குக் கொண்டு வந்தபோது, அதன் சிறப்பை நான் பார்த்தேன். பின்னர், இந்த முயற்சியைப் பற்றி கலந்தாலோசிக்க நான் ஆர்டிஎம்-மை அழைத்தேன். அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் தொடங்கி இதன் பணிகள் தொடங்கின,” என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அங்காசாபுரி, ஸ்ரீ அங்காச அரங்கில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, தீபாவளியன்று இரவு 9.00 மணிக்கு ஆர்டிஎம் தொலைக்காட்சி 2 மற்றும் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 202-இல் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும். இதில் டார்க்கி, பாலன் காஷ், சந்தேஷ், ஜூபிர் கான் போன்ற நாட்டின் பிரபல பாடகர்கள் உட்பட, நடனக் கலைஞர்கள் என 70-க்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அதோடு புகழ்பெற்ற இந்திய திரைப்பட பின்னணிப் ஸ்ரீனிவாஸும் கலந்துள்ளதாக தியோ கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் ஆஸ்ட்ரோ ஏற்பாடு செய்த தீபாவளி செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ கலந்து சிறப்பித்தார்.

கூடுதலாக, இந்த கூட்டு முயற்சியில் நாட்டின் இரண்டு தமிழ் மொழி நிலையங்களான மின்னல் எப்.எம், மற்றும் ராகா அறிவிப்பாளர்கள் முதல் முறையாக இந்நிகழ்ச்சியை இணைந்து படைத்துள்ளனர். உள்ளூர் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த வசதிகளையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை இந்த கூட்டு முயற்சி நிரூபிக்கிறது என்று தியோ தெரிவித்தார்.
“ஊடகங்கள் சில நேரங்களில் செய்தி தரத்தின் அடிப்படையில் போட்டியிடுகின்றன. ஆனால் நாம் வளங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, பார்வையாளர்களுக்கு சிறந்த ஒன்றை உருவாக்க முடியும்,” என்றார்.
இவ்வாண்டு தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் இந்த இசை நிகழ்ச்சி ஒர் இனிமையான பரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


