
எதிர் வரும் தீபாவளி கொண்டாட்ட காலத்தில் பள்ளி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்தப்படுவது நியாயமாக இல்லை என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார்.
லட்சக்கணக்கான மலேசியர்கள் மிகவும் எதிர்பார்த்து தீபாவளியை கொண்டாடுகின்றனர் என்றார் அவர்.
குடும்பங்கள் ஒன்றிணையும் நேரம் இது. பிள்ளைகள் தங்களின் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் காலம் இது என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் இந்த கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்தும் நமது மாணவர்களில் பல தேவையற்ற சுமையை எதிர் நோக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காரணம் பள்ளி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு முன்னர் மற்றும் தீபாவளி காலத்தின் போது திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளில் தேர்வுகள் அக் 6 ஆம் தேதி அல்லது அக் 13 தேதி தொடங்குகிறது.
அதே வேளையில் பல்கலைக்கழகங்களில் அக்டோபர் முழுவதும் மாணவர்கள் மதிப்பீட்டு தேர்வுகளை எழுதுகின்றனர்.
இவ்வாண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் அவ்வாரம் முழுவதும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுது வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தீபாவளி கொண்டாட்ட காலத்தில் தேர்வுகள் ஏன் திட்டமிடப்பட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்வுகளை கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஏன் முன்கூட்டியே அல்லது இந்த கொண்டாட்டத்திற்கு பிறகு நடத்தக் கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்திய சமூகத்திற்கு தீபாவளி கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் சுட்டிக் காட்டினார்.
பல்லின கலாச்சாரங்களை கொண்ட நம் நாட்டில் இதர முக்கிய கொண்டாட்டங்களை ஒப்பிடுகையில், இது நியாயமற்றது என தெளிவாக தெரிகிறது என அவர் சொன்னார்.
குடும்பங்கள் ஒன்றிணையவும் வெளியூர்களுக்கு பயணம் செய்யவும் சில கொண்டாட்டங்களுக்கு ஒரு வாரம் முழு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இது ஒரு புதிய விவகாரம் அல்ல, ஒவ்வொரு ஆண்டும் இதே பிரச்சினை தான். ஒவ்வொரு இந்திய குடும்பமும் அதிருப்தியில் இருந்து வருகிறது.
நம் நாட்டு கல்வி முறையில் நியாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு நியாயத்தை கடைபிடிக்க வேண்டும் என கணபதி ராவ் நினைவுறுத்தினார்.


