
மக்களவை அமர்வின் போது பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலர் சட்டைகளை அணிய வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்வி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் மன்ற விதிகளின்படி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய உடை, கை நீளம் அளவு கொண்ட ஆடை அல்லது முழங்கால் அளவிற்கு குறையாத ஸ்கர்ட் அணிய வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காலர் சட்டைகளை அணிய வேண்டிய கட்டாயம் குறித்து குறிப்பிடவில்லை என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் கூறினார்.
“மக்களவையில் விவாதிக்கக்கூடிய பல முக்கியமான விஷயங்கள் இருக்கும்போது, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடைகளைப் பற்றி ஒரு பிரச்சனையாக சில ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.” என தொடர்பு துணையமைச்சருமான தியோ தெரிவித்தார்.
இது குறித்து பேசிய மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ டாக்டர் ஜோஹாரி அப்துல், இது போன்ற அவை நிலைக்குழு உத்தரவுக்கு முரணாக இல்லாத வரை, ஒரு பிரச்சனையாக எழுப்பக்கூடாது என உத்தரவிட்டார்.
கடந்த திங்கட்கிழமை மக்களவையில், சட்ட உதவி மற்றும் பொது பாதுகாப்பு மசோதா 2025 முடிவுக்குக் கொண்டுவரும் சமயத்தில், உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹித், பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோ ஸ்ரீ அசாலினா உத்மானின் உடையை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தது.


