
கோலாலம்பூர் ஆக 13
இந்நாட்டிலுள்ள ஏழை இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் இந்திய உருமாற்று பிரிவான மித்ரா தோல்வி கண்டுள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் நாடாளுமன்றத்தில் கூறினார்.
சிறுபான்மையினருக்கான மேம்பாட்டுத் திட்டம் இருந்தும் எதுவும் நடக்கவில்லை என்றார் அவர்.
அதே வேளையில் 13 ஆவது மலேசியா திட்டத்தில் இன்ஜினியர்களுக்கான சிறப்பு திட்டம் எதுவும் இல்லை என அவர் சாடினார்.
ஏழை இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மித்ரா முதுகெலும்பாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை மித்ராவின் செயல் திட்டங்கள் எவ்வித அறிகுறியையும் காட்ட வில்லை என்பது தான் உண்மை என்றார் அவர்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான மித்ராவின் ஒதுக்கீட்டில் அதிகமான பணம் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் தெளிவான விளக்கத்தை தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மித்ரா உண்மையாக செயல்படுகின்றதா? அல்லது இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு மித்ரா உதவுகிறதா? என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மித்ரா விவகாரம் குறித்து 2023 ஆம் ஆண்டில் பிரதமரிடம் தாம் நேரடியாக கொண்டு சென்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால் இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மித்ராவிலிருந்து தாம் நீக்கபட்டது தான் மிஞ்சியது என அவர் குறிப்பிட்டார்.
13 ஆவது மலேசிய திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் சுமார் 7 விழுக்காடு உள்ளனர்.
ஆகையால் 13 ஆவது மலேசிய திட்டத்தின் ஒதுக்கீட்டில் இந்திய சமூகத்திற்கு 20 விழுக்காடு ஆவது ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமரை தாம் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.


