
நடப்பு அரசாங்கம் நடத்தி வரும் மலிவான அரசியல் நாடகம் மக்கள் எழுச்சியை ஒரு போதும் தடுக்க முடியாது என பாஸ் ஆதரவு பேரவையின் செயலாளர் ஹரிதரன் ராமன் கூறினார்.
நடப்பு அரசாங்கம் நாட்டை நிர்வாகம் செய்வதில் தோல்வி கண்டுள்ளதல், அந்த சுமையை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பொருளாதார நெருக்கடி, அன்றாட வாழ்வாதாரம் உயர்வு போன்றவை நாட்டு மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கி வரும் வெற்றி வாக்குறுதிகளால், அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவுதான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ‘தூருன் அன்வார்’ பேரணி என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பேரணியில் சுமார் 20,000 பேர் தான் கலந்து கொண்டதாக போலீசார் கூறியிருப்பது வேடிக்கையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த பேரணியில் கலந்து கொள்ள கூடாது என மக்களை திசை திருப்பவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அன்வர் மக்களுக்கு வெ100 சன்மானம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை பிரதமர் ஏன் இப்பொழுது தான் செய்துள்ளார் என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தப் பேரணியை வெறும் பேரணியாக அரசாங்கம் கருதக்கூடாது. இது மக்களின் ஆதங்கம் என அவர் தெரிவித்தார்.
மக்களின் மனக் குறைகளுக்கு இந்த அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். மக்களின் கோரிக்கையை நிராகரித்தால், அதற்கான விளைவை இந்த அரசாங்கம் எதிர்நோக்கும் நேரம் வரும் என அவர் சாடினார்.


