
நாட்டில் இந்திய முஸ்லிம் மக்களை மாமாக் என்று அன்போடு அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் மாமாக் என நக்கலாகக் கேலி செய்யக் கூடாது என்று முன்னாள் பிரெஸ்மா துணைத் தலைவர் ஹாஜி காதிர் சுல்தான் கூறினார்.
நாடாளுமன்றத்தில் மாமாக் என்று கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
குறிப்பாக இந்திய முஸ்லிம் மக்களை புண்படுத்தும் மாமாக் என்ற வார்த்தை மக்களவையில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் வலியுறுத்தி உள்ளார்.
அவரின் இம்முயற்சிக்கு நன்றி. ஆனால் இந்த வார்த்தை இந்திய முஸ்லிம்களை புண்படுத்தும் சொல் அல்ல.
ஆரம்பக் காலக்கட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் இங்குள்ள பெண்களை திருமணம் செய்துக் கொண்டனர்.
அப்போது இங்குள்ள கலாச்சாரப்படி அபாங் என்று அழைத்தால் அண்ணன் என்று அர்த்தமாகிவிடும்.
இன்னும் இங்குள்ள மலாய் இனத்தவர் பலர் இந்திய முஸ்லிம்களை சொந்த சகோதரர்களாக அன்போடு பாவித்து தங்கள் பிள்ளைகளுக்கு மாமா என்ற உரிமையோடு அழைக்கும் பண்பும் உருவானது.
அதனால் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மாமா, மாமு என்று அழைத்தனர். அது கால ஓட்டத்தில் மாமாக் என்று மாறிவிட்டது.
மேலும், அது இந்திய முஸ்லிம் மக்களின் செல்லப் பெயராக மாறிவிட்டது.
ஆகவே இந்திய முஸ்லிம்களை மாமாக் என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இந்திய முஸ்லிம்களை மாமாக் என்று கேலி, கிண்டல் செய்வது தான் மிகப் பெரிய தவறாகும்.
ஆகையால் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று ஹாஜி காதிர் சுல்தான் கூறினார்.


