
மலேசிய இந்திய உருமாற்று பிரிவான மித்ராவின் கணினி உதவி திட்டம் கணக்காய்வு செய்யப்பட்டு வருவதாக மித்ராவின் தலைவர் பி. பிரபாகரன் கூறினார்.
மித்ராவின் புதுப்பிக்கப்பட்ட கணினி உதவி திட்டத்தை தேசிய கணக்காய்வு இலாக்கா கணக்காய்வு செய்து வருவதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் குறித்து அந்த இலக்கா கணக்காய்வு செய்து வருவதாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த கணக்காய்வின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தமிழ் பள்ளிகளுக்கு இந்தத் திட்டத்தை தொடங்கினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 6,000 புதுப்பிக்கப்பட்ட கணினிகள் 520 தமிழ் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்த புதுப்பிக்கப்பட்ட கணினிகள் பயன்படுத்த இயலவில்லை என்பதால் இந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக மலேசிய இந்திய கட்சியின் துணைத் தலைவர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகையால் இந்த திட்டம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விசாரணை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


