
விரைவில் நடைபெறவிருக்கும் பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராபிசி ராம்லி மற்றும் நூருல் இஸாசா அன்வார் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்திற்கு எவ்வித பயனும் இல்லை என பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் மலாய்க்காரர்கள் அல்லாத பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
எதிர்க்கட்சி கூட்டணியில் இவ்விருவர் இருந்தபோது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
ஆட்சிக்கு வந்தால் இந்திய சமுதாயத்திற்கு மாற்றத்தை கொண்டு வரப் போவதாக இவர்கள் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் கடந்த பொதுத்தேர்தலில் ஆட்சிக்கு வந்த இவர்கள் இந்திய சமுதாயத்திற்கு எவ்வித நன்மையும் செய்ததில்லை என அவர் சாடினார்.
ஆகையால் எதிர் வரும் பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடப்பு துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான ராபிசி ராம்லி மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதல்விக்கு இடையே யாராவது ஒருவர் வெற்றி பெற்றால் இந்திய சமுதாயத்திற்கு எவ்வித பயனும் இல்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
பதவி அதிகாரத்துக்கு மட்டும் தான் இவர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிகாரத்திற்கு வந்து விட்டால் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்களைப் பற்றி இவர்கள் மறந்து விடுவார்கள் என அவர் தெளிவுப்படுத்தினார்.
தேர்தல் காலங்களில் மட்டும் தான் இவர்கள் இந்திய சமூகத்தின் உதவிகளை நாடி வருகின்றன.
ஆனால் வெற்றி பெற்ற பிறகு இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தை இவர்கள் சற்றும் மதிப்பதில்லை என அவர் சாடினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இதுவரை இந்திய சமூகத்திற்கு எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பது தான் உண்மை.
இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் பிரதமர் அன்வார் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்து வருவதாக டத்தோஸ்ரீ சஞ்சீவன் சுட்டி காட்டினார்.


