
மே 8 நாட்டில் தமிழ் மொழி, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இந்திய சமூகத்தின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ரி.ம 20,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்னல் எப்.எம் வானொலியுடன் இணைந்து மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்த 2025 சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளை, 2,000 புத்தகங்களாக அச்சிட இந்த ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்
“இந்த சிறுகதைப் புத்தகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்படும். தமிழ் மாணவர்களிடையே வாசிப்பு கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியாகும். அதோடு, நாட்டில் தமிழ் எழுத்தாளர்களை ஆதரிப்பதற்கான ஒரு சிறந்த முயற்சி இது என்று நான் நினைக்கிறேன்,” என அங்கசாபுரி, கோட்டா மீடியாவில் நடைபெற்ற 2025 சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட தியோ இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக ரி.ம 20,000 தொகைக்கான காசோலையை, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.மோகனன் பெருமாள் துனையமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டார். இளைய தலைமுறையினரின் ஊக்கமளிக்கும் பங்கேற்பில் பெருமிதம் தெரிவித்த தியோ, தமிழ் மொழி தொடர்ந்து செழித்து வருவதையும், படைப்பாற்றல் அதிகரித்து வருவதையும் வரவேற்றார்.
இப்போட்டியில் பல்வேறு வயதினரிடமிருந்து பெறப்பட்ட 209 சிறுகதைகளில், ஏற்பாட்டுக் குழுவால் 20 சிறந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முதலிடத்தை ஆர். தரிஷ்யன் வென்றார். அதைத் தொடர்ந்து எம். கார்த்திகேசன் இரண்டாம் இடத்தையும், பி. அத்திலெட்சுமி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்தப் போட்டி எழுத்தாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு களத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் உணர்விற்கு ஏற்ப சமூகத்தின் கதையை வடிவமைப்பதில் ஒரு முக்கிய தளமாகவும் செயல்படுகிறது.
பல்வேறு இனங்களின் மொழிகள் மற்றும் இலக்கியங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கம் எப்போதும் உதவும் என்பதை கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமனான தியோ கூறினார்.


