
பெட்டாலிங் ஜெயா மார்ச் 5
அரசாங்கம் வழங்கி வரும் ரஹ்மா அடிப்படை உதவி திட்டத்திற்கு குறிப்பாக பேரங்காடிகளில் போதுமான பொருட்கள் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் (போம்கா) வலியுறுத்தியது.
இந்த உதவி திட்டத்தை பெரும் குடும்பங்களின் எண்ணிக்கை 700,000-லிருந்து 5.4 மில்லியனாக உயர்வு கண்டுள்ளதாக போம்கா தலைமை செயல்முறை அதிகாரி டி. சரவணன் கூறினார்.
இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நாடு முழுதும் உள்ள சம்பந்தப்பட்ட பேரங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் தங்களின் மைகார்டு கொடுத்து தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தால் வாழ்க்கை செலவினம் குறைவதோடு வாங்கும் சக்தி அதிகரிக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இத் திட்டம் வெற்றி பெற சில்லறை வியாபாரிகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மிக அவசியம் என்றார் அவர்.
தேவை அதிகரிப்பால் பொருட்களின் விநியோகம் குறைந்தால் இத்திட்டம் சுமூகமாக செயல்படுவதற்கான தடை ஏற்படும் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் விநியோகிப்பாளர்களுடன் சில்லறை வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் சொன்னார்.
அதேவேளையில் பொருட்களின் விலைகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
அனைத்து தரப்பின் வரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் இத்திட்டம் தடையின்றி செயல்படும் என்றார் அவர்.
இதனிடையே இத்திட்டத்தில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என மலேசிய முஸ்லிம் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் சங்கத்தின் செயலாளர் சுஹூபுடின் சஹூபார் கூறினார்.
இந்தத் திட்டத்திற்கு சில்லரை வியாபாரிகளின் எண்ணிக்கையை 700-லிருந்து 3,500-ஆக அரசாங்கம் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் சொன்னார்.
இதனால் சில்லறை வியாபாரிகளில் வருமானம் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.


