
கூகுள் மேப்ஸ் மற்றும் வேஸ் (Waze) பயன்பாடுகளில், இந்து ஆலயங்களுக்கு ‘சட்டவிரோத’ (Illegal Temple) என்ற முத்திரை பதிக்கப்பட்ட விவகாரம் தற்போது சட்டம் 588 – தகவல் தொடர்பு பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று தேசிய போலிஸ்படை துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
இது இணையதள துஷ்பிரயோகம் மற்றும் சமூக நலனை பாதிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பும் செயல் என கூறப்படும் நிலையில், தேச நிந்தனை சட்டத்திற்கும் இது உட்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உரிமை கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல், இது ஒரு மதவெறி சார்ந்த செயல் எனக் கூறி, கூகுளுடன் இணைந்து அரசு இவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Waze சோதனையில், பல இந்து கோவில்கள் ‘Illegal Temple’ என குறிக்கப்பட்டிருந்ததும், இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மதத்தை இழிவுபடுத்தும் முயற்சியாக பலர் விமர்சிக்கின்றனர்.
அதே நேரத்தில், தலைநகரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலின் நில மாற்றம், புதிய பள்ளிவாசல் கட்டுமானத்துடன் இணைக்கப்பட்டதையும் மக்கள் கவனத்தில் எடுத்துள்ளனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.


