
கோலாலம்பூர் மார்ச் 13
அண்மைய காலமாக மலேசியாவில் இனப் பதற்றம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
பல்லின சமூகத்தில் புரிந்துணர்வு, நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை மிக மிக அவசியம் என்றார் அவர்.
அதே வேளையில் நமது இந்திய சமூகத்தினர் இந்நாட்டில் தங்களின் மக்கள் தொகை உண்மை நிலவரத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நாட்டின் மக்கள் தொகையில் இந்தியர்கள் 10 விழுக்காடு குறைவாக தான் உள்ளனர். இந்த நிலையில் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் தான் நாம் நமது கவனத்தை செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் தங்களின் சொந்த நலன்களுக்காக இன ரீதியிலான விவகாரங்களை தூண்டி வரும் நபர்களுக்கு நாம் ஒருபோதும் துணை போக கூடாது என அவர் ஆலோசனை கூறினார்.
மக்களிடையே பதற்றத்தை ஏற்படுதுவதை தலைவர்கள் தவிர்க்க வேண்டும். தலைவர்கள் பொறுப்பற்றதனமான அறிக்கைகளை வெளியிடக் கூடாது என அவர் ஆலோசனை கூறினார்.
முஸ்லிம் சமூகத்துடன் சர்ச்சையில் ஈடுபடுவதால் இந்திய சமூகம் வலிமை அடைந்து விடாது என அவர் நினைவுறுத்தினார்.
இது நம்மை மேலும் வலிமையடைய செய்யும் என அவர் சுட்டிக் காட்டினார்.
நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் நமக்கு நன்மையை தரும்.
நமது சமுதாயத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் அதிக சர்ச்சைகள் அண்மைய காலமாக உருவெடுத்து வருகிறது.
இந்த நிலை மாற வேண்டும். இந்துக்கள் என்ற வகையில் நமக்கென அடையாளங்கள் உள்ளன.அதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
ஆகையால் இன ரீதியிலான சர்ச்சைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இன ரீதியிலான சர்ச்சைகள் சமூகங்களை சீரழித்து விடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.


