
ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தைப்பூச திருவிழாவில் சுமார் 3 முதல் 4 இலட்சம் பக்தர்களுடன் சுற்றுப்பயணிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இவ்வாண்டில் மதுபானம் அருந்திவிட்டு அராஜக செயலில் ஈடுபடும் நபர்களை போலீசார் தயவுதாட்சண்யமின்றி கைது செய்வார்கள் என்று பேராக் மாநில சுகாதாரம், ஒற்றுமை, மனிதவளம் மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் எச்சரித்தார்.
மதுபானம் அருந்திவிட்டு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் போலீஸ் தரப்பினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள். இவ்விவகாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மன்னிப்பு கிடையாது.
இவ்விவகாரத்தில் யாருக்கும் உதவ மாட்டேன் என்று பேராக் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு தைப்பூச கூட்டத்தில் திட்டவட்டமாக அவர் கூறினார்.
தைப்பூச காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை போலீஸ் தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர்.
அதற்கான தீர்வு குறித்தும் அவர்கள் முறையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.
அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலை ஓரங்களில் அமைக்கப்படும் வியாபார கூடாரங்களை ஈப்போ மாநகர் மன்றம் அப்புறப்படுத்தி விடுவார்கள்.


