
புவனேஸ்வர் ஜன 8
18 ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு இன்று ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த மாநாட்டை ஜன 9 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.
இந்த மாநாட்டிற்கு உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய வம்ச பேராளர்கள் வருகை புரிந்துள்ளனர்.
இதன் முதல் கட்டமாக புவனேஸ்வரில் உள்ள சுவோஸ்தி ஹோட்டலில் நடந்த அறிமுக விழாவில் இந்திய வெளி விவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த 18 ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர்கள் வருகையை கண்டு தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டு இந்த மாநாடு ஓடிசா தலைநகரான புவனேஸ்வரில் நடப்பது பெரும் அர்த்தத்தை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
நமது பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுதுமே 3T பற்றி வலியுறுத்தி வருகிறார்.3T என்றால் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாவை குறிக்கிறது.
ஆகையால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகளாவிய பேராளர்கள் ஒடிசாவில் கிடைக்கப்பெறும் இந்த மூன்று துறைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் சொன்னார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்வதோடு, இம்மூன்று துறைகளிலும் கிடைக்க பெறும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் வலியுறுத்தினார்.
பொருளாதார ரீதியில் துரிதமாக வளர்ச்சி கண்டு வரும் ஒடிசாவில் அதிகமான வர்த்தக வாய்ப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்கள் இங்கு கிடைக்கப்பெறும் வர்த்தக வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த மாநாட்டில் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜியும் உரையாற்றினார்.
ஒடிசா கனிம வளங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில் இதர மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒடிசா எந்த நிலையிலும் பின் தங்கி விடவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த மாநிலத்தில் பல வர்த்தக வாய்ப்புகள் இருப்பதால், இந்த மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாடு ஜன 8,9,10 ஆகிய மூன்று தினங்களுக்கு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி, வர்த்தக கருத்தரங்கம் உட்பட பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மலேசியாவில் கோபியோவை பிரதிநிதித்து அந்த இயக்கத்தின் தலைவர் ரவியின் தலைமையில் சுமார் 40 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


