Monday, November 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நஜிப் மன்னிப்பு விவகாரத்தில் அன்வாரின் பங்கு என்ன? அரண்மனை மீது பழியைச் சுமத்துவது ஏன்? – பி. ராமசாமி கேள்வி

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் என்பதில் நியாயமான சந்தேகத்திற்கு இடமில்லை என்று உரிமை கட்சித் தலைவர் பி. ராமசாமி தெரிவித்துள்ளார்.

நஜிப்புக்கு வழங்கப்பட்ட பகுதி மன்னிப்பில் வீட்டுக் காவலும் 50 மில்லியன் ரிங்கிட் அபராதமும் தொடர்புடைய அம்சங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், மன்னிப்பு வழங்கும் அரசியலமைப்பு அதிகாரத்தை மாமன்னர் பயன்படுத்தியிருந்தாலும், மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

ஆரம்பத்தில், நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதற்கு மாமன்னரின் தனிப்பட்ட விருப்புரிமையே காரணம் என்ற தோற்றத்தை அன்வார் ஏற்படுத்தியதாக ராமசாமி குற்றஞ்சாட்டினார். ஆனால், மன்னிப்பு வாரியத்தின் தலைவராக மாமன்னர் இருந்தாலும், அந்த வாரியத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பும் இருப்பதை அன்வார் மறைத்ததாக அவர் விமர்சித்தார்.

“மன்னிப்பு வழங்குவதில் மாமன்னரின் பங்கு மட்டுமே முழுமையானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம், அன்வார் உண்மையை மறைக்க முயன்றுள்ளார். அரசாங்கத்தின் பங்களிப்பை மறைப்பதற்காக அவர் அரண்மனை மீது பழியைத் திருப்பியுள்ளார்,” என்று ராமசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு, நஜிப்பின் மன்னிப்பு விண்ணப்பத்தை அரசியலமைப்பின் கீழ் விண்ணப்பதாரருக்கு உள்ள உரிமைகளின் அடிப்படையில் தாமே முன்வைத்ததாக அன்வார் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய ராமசாமி, இந்த முக்கியமான தகவலை அன்வார் ஏன் முன்கூட்டியே வெளிப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா என்பது தனியான விவகாரம் என்றும், ஆனால் அந்த மன்னிப்பு நடவடிக்கையில் அரசாங்கத்தின் பங்கு ஏன் மறைக்கப்பட்டது என்பதே முக்கியக் கேள்வி என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக அன்வாரே பதிலளிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும், அரசாங்கத்தின் தலைவராக அவர் உண்மையை முன்னரே வெளிப்படுத்தாமல் இருந்தது பொறுப்பற்ற நிலைப்பாடு என்றும் ராமசாமி விமர்சித்தார்.

அன்வாரும் 2022 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமராகும் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்னர் அரச மன்னிப்பைப் பெற்றிருந்ததை நினைவுபடுத்திய அவர், நஜிப்பின் மன்னிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு மறைக்கப்பட்டதற்கான காரணத்தை அன்வார் விளக்க வேண்டும் என்றார்.

DAP அமைச்சர்களின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி

அன்வாருக்கு DAP தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கி வருவதால், நஜிப்புக்கு மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதில் அக்கட்சிக்கும் பங்கு இருந்திருக்குமா என்றும் ராமசாமி கேள்வி எழுப்பினார்.

நஜிப்பின் மன்னிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து DAP பொதுச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் அமைச்சரவையிலிருந்து விலகியதாகக் கூறப்படும் நடவடிக்கையையும் அவர் விமர்சித்தார். இந்த மன்னிப்பு விவகாரத்தில் அன்வாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகவே அந்த ராஜினாமா நாடகம் அரங்கேற்றப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நஜிப்பின் மன்னிப்பு விண்ணப்பத்தில் அன்வாரின் பங்கு தற்போது வெளிப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைச்சரவையில் எஞ்சியுள்ள நான்கு DAP அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளிலிருந்து விலக வேண்டாமா என்றும் ராமசாமி வினவினார்.

மேலும், அரச மன்னிப்பு விவகாரத்தில் DAP தவறாக வழிநடத்தப்பட்டிருந்தால், அக்கட்சியின் தற்போதைய தலைவர்களும் தங்களது கட்சிப் பதவிகளிலிருந்து விலக வேண்டுமா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

நஜிப்பின் மன்னிப்பு தொடர்பான அரசாங்கத்தின் பங்கு, அன்வாரின் விளக்கங்கள் மற்றும் DAP தலைவர்களின் அரசியல் பொறுப்பு ஆகியவை குறித்து வெளிப்படையான பதில்கள் தேவை என்பதே பி. ராமசாமியின் கருத்தாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular