
நேற்று நடைபெற்று முடிந்த மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அபார வெற்றியானது மக்களின் குரல் என பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் பிகே குமரேசன் கூறினார்.
நாட்டின் ஜனநாயக நடைமுறையின் வழி மக்கள் இந்த முடிவை செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தேர்தலின் பிரச்சார காலத்தில் சில தரப்பினர் எழுப்பிய சர்ச்சைக்குரிய விவகாரங்கள் வாக்காளர்களின் கவனத்திற்கு ஏற்றவில்லை என்றார் அவர்.
சேவை, நல்ல கொள்கைகளை முன் வைத்தல் போன்ற அடிப்படையை கொண்டு மலாக்கா வாக்காளர்கள் இந்த முடிவை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இனம் மற்றும் மத விவகாரங்களை பயன்படுத்தி முஸ்லிம் அல்லாத வாக்காளர்களை கவர்ந்து விட முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
முஸ்லிம் அல்லாத வாக்காளர்களுக்கும் நிலைப்பாடு, கொள்கை மற்றும் புத்தி கூர்மை இருப்பதை இந்த தேர்தல் முடிவு தெளிவுபடுத்துவதாக அவர் சொன்னார்.


