
கோலாலம்பூர், அக் 8
தலைநகரில் வீடற்றோர் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வுகளை காணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் கண்டறிதல்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் துறை (கூட்டரசுப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் கோலாலம்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 244 வீடற்றோர் மீட்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய நடவடிக்கை கடந்த அக். 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு, கூட்டரசுப் பிரதேசத் துறை (JWP) தலைமையிலான KL Strike Force குழுவின் கீழ் நடைபெற்றது.
சௌ கிட், பெட்டாலிங் ஸ்ட்ரீட், புக்கிட் பிந்தாங், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், சென்ட்ரல் மார்க்கெட் மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் இந்த பல்வேறு அரசுத் துறைகளை உள்ளடக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய நடவடிக்கைகளின் தரவுகளின்படி, மீட்கப்பட்ட 244 பேரில் 204 பேர் மலேசியர்கள், 40 பேர் வெளிநாட்டவர்கள். இவர்களில் 211 ஆண்களும் 33 பெண்களும் அடங்குவர். 18 வயதுக்குட்பட்டவர்களும் இதில் இருந்தனர்.

மீட்கப்பட்ட அனைவரும் Medan Tuanku வீடற்றோர் சேவை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளால் பரிசோதனை மற்றும் வகைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் சமூக நலத்துறை, குடிநுழைவுத் துறை, சுகாதார அமைச்சு, தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை, தேசிய பதிவுத் துறை, கோலாலம்பூர் மாநகராட்சி மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகிய அமைப்புகள் ஈடுபட்டன.
மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கோலாலம்பூர் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் பரிசோதிக்கப்படுகின்றனர். மேலதிக சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியும் என மதிப்பிடப்படுவோருக்கு மருந்துகள் வழங்கப்பட்டு, குடும்பத்தினர் அல்லது அரசு சாரா அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கையில் துணை அமைச்சர் டத்தோ லோ சு ஃபுய், கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ ஃபட்லுன் மக் உத்ஜுட் மற்றும் JWP தலைமை இயக்குநர் டத்தோ முஹம்மது அஸ்மி முகமட் சைன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


