Monday, October 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

2027 பட்ஜெட்டில் MyDeposit திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் – REACH வலியுறுத்தல்!

கோலாலம்பூர், அக் 5

முதல் முறையாக வீடு வாங்கும் மக்கள், வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்தும் திறன் இருந்தும், ஆரம்ப வைப்புத் தொகையைத் திரட்ட முடியாமல் எதிர்கொள்ளும் சிரமத்தைப் போக்க, MyDeposit திட்டத்தை 2027 பட்ஜெட்டில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என Pusat Sumber Untuk Kemajuan Masyarakat dan Perumahan (REACH) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தற்போது முதல் வீடு வாங்குவதில் முக்கிய தடையாக இருப்பது வீட்டுக் கடனைப் பெறுவதற்கான தகுதி மட்டுமல்ல, அதற்கான ஆரம்ப முன்பணம் அல்லது வைப்புத் தொகையைச் செலுத்துவதும் என REACH தெரிவித்துள்ளது.
RM300,000 மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு 10 விழுக்காடு வைப்புத் தொகை மட்டும் செலுத்த வேண்டுமெனில் RM30,000 தேவைப்படுகிறது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக குடும்பங்களுக்கு இந்தத் தொகையைச் சேமிப்பது பெரும் சவாலாக உள்ளது.
பெரும்பாலான குடும்பங்களின் மாத வருமானத்தின் பெரும்பகுதி உணவு, போக்குவரத்து, வாடகை, குழந்தைகளின் கல்வி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்கள் போன்ற அடிப்படைச் செலவுகளுக்கே செல்கிறது. இதனால் நிலையான வருமானம் இருந்து, வீட்டுக் கடன் மாதத் தவணையைச் செலுத்தும் திறன் இருந்தாலும், வைப்புத் தொகையைச் சேமிக்க நீண்ட காலம் ஆகிறது.
இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என REACH தெரிவித்துள்ளது.
முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு உதவும் வகையில் அரசாங்கம் 2016ஆம் ஆண்டு MyDeposit திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் கீழ், வீட்டின் விலையில் 10 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக RM30,000 வரை — இதில் குறைவான தொகை — அரசாங்க உதவியாக வழங்கப்பட்டது.
வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சான KPKT நாடாளுமன்றத்தில் வழங்கிய அதிகாரப்பூர்வ தகவலின்படி, MyDeposit திட்டத்தின் மூலம் 3,106 பேர் பயனடைந்ததுடன், மொத்தம் RM86.386 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை.
இதனிடையே, இதேபோன்ற ‘Deposit Madani’ திட்டத்தை அறிமுகப்படுத்த KPKT முன்னதாக திட்டமிட்டதாகத் தகவல்கள் வெளியான போதிலும், 2025 பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் REACH சுட்டிக்காட்டியுள்ளது.
MyDeposit திட்டத்தின் அனுபவம், மாதாந்திர வீட்டுக் கடன் தவணையைச் செலுத்தும் திறன் கொண்டிருந்தும் ஆரம்ப கட்டத்தில் போதுமான சேமிப்பு இல்லாதவர்களுக்கு வைப்புத் தொகை உதவி பயனுள்ளதாக இருக்கும் என்பதை காட்டுவதாக REACH தெரிவித்துள்ளது.
எனினும், புதிய MyDeposit திட்டம் முந்தைய திட்டத்தைப் போல முழுமையான இலவச உதவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அதற்குப் பதிலாக, சுழலும் நிதி முறையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என REACH பரிந்துரைத்துள்ளது. இதன்படி, தேவையான வைப்புத் தொகையின் ஒரு பகுதியை அல்லது முழுத் தொகையையும் அரசாங்கம் முன்கூட்டியே வழங்கலாம். பின்னர், பயனாளிகள் வீடு வாங்கி குடியேறிய பிறகு, அந்தத் தொகையை நியாயமான காலத்திற்குள் வட்டியில்லாமல் தவணை முறையில் திருப்பிச் செலுத்தலாம்.
திருப்பிச் செலுத்தப்படும் தொகையை மீண்டும் பயன்படுத்தி மற்ற முதல் வீடு வாங்குவோருக்கு உதவ முடியும். இதன் மூலம் அரசாங்கத்தின் நிதி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படாமல், தொடர்ந்து சுழன்று அதிகமான மக்களுக்கு நீண்ட காலத்தில் பயனளிக்கும் என REACH தெரிவித்துள்ளது.
வீடு வாங்குவதற்கான ஆரம்ப வைப்புத் தொகை பிரச்சினைக்கு அரசாங்க தலையீடு தேவைப்படுவதை ஐக்கிய இராச்சியத்தின் அண்மைய நடவடிக்கைகளும் எடுத்துக்காட்டுவதாக REACH குறிப்பிட்டுள்ளது.
2026 செப்டம்பரில் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு உதவும் ‘Your First Home’ திட்டத்தை அறிவித்ததாக REACH தெரிவித்துள்ளது. அதன் கீழ், முதல் வீடு வாங்குவோர் 2.5 விழுக்காடு வரை குறைந்த வைப்புத் தொகையைச் செலுத்த முடியும் என்றும், அரசாங்கம் 20 விழுக்காடு equity loan வழங்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டம் MyDeposit திட்டத்துடன் முழுமையாக ஒரே மாதிரியானதல்ல என்றாலும், வீடு வாங்கும் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் நிதிச் சுமையை குறைத்து, கடன் தவணையைச் செலுத்தும் திறன் கொண்டவர்களுக்கு வீடு வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்துவது என்ற அடிப்படை நோக்கம் ஒத்ததாக இருப்பதாக REACH தெரிவித்துள்ளது.
எனவே, மலேசிய அரசாங்கம் இந்த அணுகுமுறையை மீண்டும் பரிசீலித்து, 2027 பட்ஜெட்டில் ‘MyDeposit 2.0’ திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என REACH வலியுறுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கு இலக்கு வைக்கப்படுவதுடன், மலிவு விலை வீடுகளுக்கு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் REACH பரிந்துரைத்துள்ளது.
“இலவசமாக வீடுகளை வழங்குவது இதன் நோக்கம் அல்ல. மாதாந்திர வீட்டுக் கடன் தவணையைச் செலுத்தும் திறன் கொண்ட மக்களுக்கு, வீடு வாங்குவதற்கான முதல் அடிப்படைத் தடையான வைப்புத் தொகையைச் சமாளிக்க உதவுவதே நோக்கம்,” என REACH-ன் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ இஸ்கந்தர் அப்துல் சமத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular