Monday, October 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

போராட்டங்கள் இருந்தபோதும் டிரம்பை வரவேற்றார்கள்; ஹூட்டனுக்கு மட்டும் ஏன் இல்லை? – எம்.பி. கேள்வி

பெட்டாலிங் ஜெயா, அக் 5 பாலஸ்தீனம் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றிருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மலேசியா வரவேற்றது. அதேபோல், பாதுகாப்பு அபாயங்களை முறையாகக் கையாள முடிந்தால், அமெரிக்க நற்செய்திப் பாடகர் இஸ்ரேல் ஹூட்டனின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுவதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தெரிவித்துள்ளார்.

சபாவில் நடைபெறவிருந்த இஸ்ரேல் ஹூட்டனின் இசை நிகழ்ச்சியை குறிப்பிட்டுப் பேசிய லிம், நிகழ்ச்சியை ஒத்திவைக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்துவோம் என்று காவல்துறை தெரிவித்திருப்பதை விமர்சித்தார்.

ஹூட்டனின் நிகழ்ச்சி வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டும் என்று காவல்துறை இதுவரை எந்தப் பொதுவான ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

“ஹூட்டனின் நிகழ்ச்சியைச் சுற்றியுள்ள உணர்வுபூர்வமான சூழ்நிலையையும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் ஏன் கையாள முடியாது என்பதை காவல்துறை விளக்க வேண்டும்.

“சில குழுக்களின் எதிர்ப்புகள் மட்டுமே ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கக் கூடாது,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் பேணுவது காவல்துறையின் அடிப்படைப் பொறுப்பு என்றும், நிகழ்ச்சியைத் தடுக்கப் போவதாக மிரட்டும் எவர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் லிம் கூறினார்.

“பொது ஒழுங்கு என்பது, யார் பாடலாம், யார் அந்தப் பாடலைக் கேட்கலாம் என்பதை குழப்பத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களின் மூலம் யாரும் தீர்மானிக்க அனுமதிக்கும் ஒரு காரணமாக இருக்கக் கூடாது,” என்றார்.

சபா காவல்துறைத் தலைவர் ஜௌத்தே டிகுன் கடந்த வாரம், நிகழ்ச்சியை ஒத்திவைக்குமாறு கூறியதற்குக் காரணம் பொதுமக்களின் எதிர்வினைகளும் சமூக உணர்வுகளுமே என்று தெரிவித்திருந்தார்.

முன்மொழியப்பட்ட நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறைக்கு இரண்டு புகார்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகரின் பெயரும் இஸ்ரேல் தொடர்பான அவரது நிலைப்பாடும் சமூகத்தில் உணர்வுகளைத் தூண்டியுள்ளதாக ஜௌத்தே கூறினார்.

நிகழ்ச்சிக்கான தேதிகள், இடங்கள் மற்றும் டிக்கெட் விலைகள் ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏற்பாட்டாளர்கள் இன்னும் மாநில அரசிடம் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த இசை நிகழ்ச்சி அக்டோபர் 22 முதல் 25 வரை கோட்டா கினபாலுவில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இது பாடகரின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும்; மலேசியாவில் அவர் செல்லும் இடங்களில் சபாவும் ஒன்றாகும்.

முன்னாள் முதலமைச்சர்களான சல்லே சைட் கெருவாக் மற்றும் ஷஃபி அப்தால் ஆகியோரும், பாதுகாப்பு தொடர்பான கவலைகளை நியாயமான முறையில் கையாள முடிந்தால் நிகழ்ச்சி நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சபா கிறிஸ்தவர்கள் தங்களது மதத்தை அமைதியாக கடைப்பிடிக்கும் உரிமையும், பரஸ்பர மரியாதையின் அவசியமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular