
கோலாலம்பூர், செப் 9
AirAsia Group Bhd நிறுவனம் திட்டமிட்டுள்ள RM4.74 பில்லியன் (US$1.17 பில்லியன்) வரையிலான நிதி திரட்டல், நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக அல்ல; மாறாக, ஏற்கனவே உள்ள கடன்களை மறுநிதியளிப்பு மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கும், நிறுவனத்தின் நிதி நிலையை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
முன்னர் AirAsia X Bhd என அழைக்கப்பட்ட இந்தக் குழுமம், திட்டமிட்டுள்ள நிதி திரட்டலில் சர்வதேச கடன் சந்தைகளில் இருந்து RM4.04 பில்லியன் (US$1 பில்லியன்) வரையிலும், உள்நாட்டு கடன் வசதிகள் மூலம் RM700 மில்லியன் வரையிலும் திரட்டப்பட உள்ளதாகக் கூறியுள்ளது.
AirAsia நிறுவனத்தின் துணைக் குழும தலைமை நிர்வாக அதிகாரி Farouk Kamal, இந்த நிதி திரட்டல் நிறுவனத்தின் balance sheet-ஐ மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தற்போதைய மூலதன சந்தை நடவடிக்கைகள் நிறுவனத்தின் நிதி நிலையை முன்கூட்டியே மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடனான உறவுகளைப் பயன்படுத்தி, கொரோனா காலத்தில் பெறப்பட்ட அதிக வட்டி கொண்ட பழைய கடன்களை, நீண்டகாலம் கொண்ட புதிய நிதி வசதிகளாக மாற்றி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் வட்டி செலவைக் குறைத்து, கடன்களின் காலத்தை நீட்டித்து, நிறுவனத்தின் நிதி கட்டமைப்பை சீர்படுத்தி, எதிர்கால வளர்ச்சிக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவது AirAsia-வின் நோக்கமாகும்.



