
கோலாலம்பூர், செப் 7
நேரலை இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்காக பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மற்றும் விமானப் பயணத்தை ஒரே முன்பதிவில் பெறக்கூடிய புதிய ‘Event + Flight’ தொகுப்பை AirAsia MOVE அறிமுகப்படுத்தியுள்ளது.
AirAsia MOVE-இன் பிரத்யேக நிகழ்ச்சி தளமான MOVETIX மூலம் வழங்கப்படும் இந்தப் புதிய சேவை, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மின்னணு நடன இசை விழாக்களில் ஒன்றான Djakarta Warehouse Project (DWP) 2026 உடன் முதன்முறையாக அறிமுகமாகிறது.
இதன் மூலம் இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் ரசிகர்கள், தங்களது விமானப் பயணம் மற்றும் நிகழ்ச்சி நுழைவுச்சீட்டை ஒரே இடத்தில் எளிதாகத் திட்டமிட்டு முன்பதிவு செய்ய முடியும்.
Capital A தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், தற்போதைய சூழலில் பயணம் என்பது ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதை மட்டும் குறிக்கவில்லை என்றும், மக்களை ஒன்றிணைக்கும் அனுபவங்களும் அதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

நேரலை நிகழ்ச்சிகள் மக்களைப் பயணம் செய்ய அதிகளவில் தூண்டி வருவதால், ஆசியான் முழுவதும் இசை, கலாசாரம் மற்றும் பல்வேறு அனுபவங்களுடன் அதிகமான மக்களை இணைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
MOVETIX by AirAsia MOVE தலைவர் ஹசன் சவுத்ரி கூறுகையில், முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் கச்சேரிகள் நடைபெறும் இடங்களுக்கான பயண முன்பதிவுகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பதை தாங்கள் கண்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய Event + Flight தொகுப்பு மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தங்களது சொந்த சந்தைகளுக்கு அப்பால், நிகழ்ச்சிக்காக பயணம் செய்யத் தயாராக உள்ள வாடிக்கையாளர்களை நேரடியாகச் சென்றடைய முடியும் என அவர் கூறினார்.
20% வரை சேமிப்பு
DWP 2026-க்கான MOVETIX Event + Flight தொகுப்பைப் பயன்படுத்தும் பயணிகள் 20 சதவீதம் வரை சேமிக்க முடியும் என AirAsia MOVE தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து ஜகார்த்தாவுக்கான விமானப் பயணம் மற்றும் DWP பொது நுழைவுச் சீட்டு அடங்கிய தொகுப்பு RM1,300 முதல் AirAsia MOVE வழியாக கிடைக்கிறது.
Ismaya Group இணை நிறுவனர் கிறிஸ்டியன் ரிஜான்டோ, DWP ஒரு சாதாரண இசை விழா மட்டுமல்ல என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ரசிகர்களை இந்தோனேசியாவுக்கு ஈர்க்கும் முக்கிய நிகழ்வாக வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
MOVETIX உடனான இந்தக் கூட்டாண்மை மூலம் கோலாலம்பூர் அல்லது பாங்காக் போன்ற நகரங்களில் உள்ள ரசிகர்களும் DWP நுழைவுச்சீட்டு மற்றும் விமானப் பயணத்தை ஒரே இடத்தில் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
DWP 2026 மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியை எதிர்காலத்தில் ஆசியான் மற்றும் அதற்கு அப்பால் நடைபெறும் மேலும் பல நேரலை நிகழ்ச்சிகளுக்கும் விரிவுபடுத்த AirAsia MOVE திட்டமிட்டுள்ளது.


