
கோலாலம்பூர் செப் 6
கடந்த 2014 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா மலேசிய வருகையின் போது அரசாங்கத்தை கவிழ்க்க பாஸ் கட்சிக்கு உதவ அமெரிக்கா முன் வந்ததாக பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங்கின் அறிக்கை குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வலியுறுத்தினார்.
அப்போதைய நடப்பு அரசாங்கத்தை தவிர்க்க பாஸ் கட்சி தலைவர்களுடன் அமெரிக்க தூதரகத்தில் ஒரு சந்திப்பு நடந்ததாக ஹாடி அவாங்கின் அறிக்கையில் உண்மை உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
அரசாங்கத்திற்கு எதிரான இந்த சதி திட்டம் குறித்து பாஸ் தலைவர்கள் அப்பொழுது ஏன் போலீசாரிடம் புகார் செய்யவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்பதால் இது குறித்து, ஹாடி ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த கடுமையான குற்றச்சாட்டு குறித்து பாஸ் தலைவர் ஹாடிக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டு விட்டதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அமெரிக்க தூதரகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பதை ஹாடி அடையாளம் காண வேண்டும் என அவர் சொன்னார்.
அந்த சந்திப்பில் தாக்கியுடின் ஹசான் மற்றும் அமாட் சாம்சுரி கலந்து கொண்டதாக ஹாடி அண்மையில் நடைபெற்று முடிந்த பாஸ் கட்சியின் பேராளர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்பதால் இந்த விவகாரத்தில் போலீசார் மெத்தன போக்கை கடைபிடிக்கக் கூடாது என லிம் நினைவுறுத்தினார்.



