
கோலாலம்பூர் ஆக 20
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சட்டம் (AUKU) ரத்து செய்யப்படுவது மாணவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும், புதிய சிந்தனைகளை முன்வைக்கவும் அதிக வாய்ப்பை ஏற்படுத்தும் என தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
AUKU ரத்து செய்யப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருப்பது, மாணவர்களை வலுப்படுத்துவதுடன் நாட்டின் உயர்கல்வித் துறையின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
1971-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட AUKU, நாட்டின் பொதுப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்து வந்ததாக அவர் கூறினார்.
இச்சட்டம் பல்வேறு காலக்கட்டங்களில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், அதனை முழுமையாக ரத்து செய்வதற்கான நடவடிக்கையை இதுவரை எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் AUKU-வை ரத்து செய்வதன் மூலம் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சீர்திருத்தங்களுக்குப் புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக மாணவர்களை வலுப்படுத்துவதிலும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை உறுதிப்படுத்துவதிலும் இது முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் பல்கலைக்கழகக் கொள்கைகளைப் பெறுபவர்களாக மட்டும் இல்லாமல், தங்களது வாழ்க்கையைப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் முடிவுகளை உருவாக்கும் செயல்முறையிலும் பங்களிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், மாணவர்களின் சுதந்திரம் மதிக்கப்படுவதையும், பல்கலைக்கழக நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வு நிலைநாட்டப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
AUKU ரத்து செய்யப்படுவது ஒரு முடிவல்ல என்றும், மாறாக மேலும் திறந்த, தன்னாட்சி கொண்ட மற்றும் பொறுப்பான உயர்கல்விக்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றும் அவர் கூறினார்.


