Thursday, November 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜேசன் பிரசாரப் பதாகைகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டதாகச் சந்தேகம்அனைத்துத் தரப்பினரும் ஆரோக்கியமான தேர்தல் போட்டிக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தல்!

மலாக்கா, நவம்பர் 11

பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின்பெங்காலான் பத்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜேசன் சே ஸி நாதனின் (Jason Tze-Xi Nathan) தேர்தல் பிரசாரப் பதாகைகள் சில திட்டமிட்டு அகற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, பொறுப்பற்ற தரப்பினர் இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பெங்காலான் பத்து தொகுதி பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் முஹம்மது டேனிஷ் ஸைனுடின் (Muhamad Danish Zainudin) வலியுறுத்தியுள்ளார்.

நேற்று இரவு (நவம்பர் 10) தேர்தல் பிரசாரக் குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெங்காலான் பத்து சுற்றுவட்டாரச் சாலையோரங்களில் முன்னதாக நிறுவப்பட்டிருந்த ஜேசனின் பல தேர்தல் பதாகைகள் திட்டமிட்டு அகற்றப்பட்டு, புல்வெளியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

மேலும், சில பதாகைகளில் கூர்மையான பொருளால் கிழிக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்பட்டன. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் அழுக்கான அரசியலுக்கு வழிவகுப்பது மிகவும் வருத்தமளிப்பதாகும்.

எனவே, எதிர்த்தரப்பினராக இருந்தாலும் சரி, வேறு எந்தத் தரப்பினராக இருந்தாலும் சரி, இத்தகைய அரசியல் முறைகேடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், எதிர்தரப்பினரைப் பலவீனப்படுத்தும் நோக்கில் அவர்களின் தேர்தல் பிரசாரப் பொருள்களைச் சேதப்படுத்தும் தந்திரங்களைக் கையாளக்கூடாது என்றும் டேனிஷ் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் பிரசாரக் காலம் என்பது ஒவ்வொரு வேட்பாளரும் அரசியல் கட்சியும் தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளை மக்களிடம் எடுத்துரைப்பதற்கும், வாக்காளர்களை நேரடியாகச் சந்திப்பதற்கும், மக்களின் கருத்துகளைக் கேட்டறிவதற்குமான காலமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, அனைத்து தரப்பினரும் தொழில்முறையுடனும் நாகரிகத்துடனும் நடந்துகொண்டு, கொள்கைகள், சிந்தனைகள் மற்றும் கடந்தகாலச் சேவைப் பதிவுகளின் அடிப்படையில் போட்டியிட வேண்டும். மாறாக, தேர்தல் பிரசாரப் பொருள்களைச் சேதப்படுத்துவது அல்லது இதர ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

“தேர்தல் என்பது வெளிப்படையான மற்றும் நியாயமான அரசியல் போட்டியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுக்கென மாறுபட்ட நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் கொண்டிருக்கலாம். அரசியல் கட்சிகளும் உண்மைகளின் அடிப்படையில் ஒன்றையொன்று விமர்சிக்கச் சுதந்திரம் உண்டு. இருப்பினும், இவை அனைத்தும் பகுத்தறிவுடனும் தொழில்முறை அணுகுமுறையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

“போட்டியாளர்களைப் பலவீனப்படுத்தும் நோக்கில் மற்றவர்களின் தேர்தல் பிரசாரப் பதாகைகளைச் சேதப்படுத்தவோ அகற்றவோ வேண்டிய அவசியம் எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமது தேர்தல் பிரசாரக் குழுவினருடன் இணைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் டேனிஷ் தெரிவித்தார். இவ்விவகாரத்தை காவல்துறையும் தேர்தல் ஆணையமும் (SPR) தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, சம்பவத்தின் பின்னணியையும் இதற்குப் பொறுப்பான தரப்பினரையும் கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய செயல்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படக்கூடாது என்றும், தேர்தல் காலத்தில் பிரசாரப் பொருள்களைச் சேதப்படுத்துவது ஒரு சாதாரணமான நிகழ்வாகக் கருதப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“சம்பந்தப்பட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து, இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்திக்கொள்வார்கள் என நம்புகிறோம். இதன் மூலம் அனைத்து வேட்பாளர்களும் ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில் ஆரோக்கியமான சூழலில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க முடியும்.

“ஆரோக்கியமான தேர்தல் போட்டிக்குத் திரும்புவோம். இதன் மூலம் வாக்காளர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சியின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்வதற்கும், வாக்களிக்கும் முன் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளைப் புரிந்துகொள்வதற்கும் போதிய வாய்ப்பும் கால அவகாசமும் கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.

படம்: தேர்தல் பிரசாரப் பொருள்களைச் சேதப்படுத்தி ஜனநாயக மாண்பைக் குலைக்கும் சில தரப்பினரின் செயல்களைக் கண்டிக்கும் டேனிஷ் (இடமிருந்து இரண்டாவது) மற்றும் தேர்தல் பிரசாரக் குழுவினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular