
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சி ஒரு
‘குழப்பவாதி’ என கூறியுள்ள அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டினின் அறிக்கை, அந்தக் கட்சியின் அகங்காரத்தை காட்டுவதாக பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் சாடினார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை தொடர்ந்து, அம்னோ தலைவர்களுக்கு தலை கனம் பிடித்து விட்டதாக பெர்சாத்து கட்சியின் ஜெராம் பாடாங் சட்டமன்ற வேட்பாளருமான அவர் சுட்டிக்காட்டினார்.
அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தாங்கள் செய்த ஊழல்களை, அம்னோ தலைவர்கள் ஒரு பாடமாக இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று பாஸ் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் கைகோர்த்து கொண்டு அம்னோ தலைவர்கள் ஆணவமாக பேசி வருகின்றனர் என்றார் அவர்.
நெகிரி செம்பிலான் தேர்தலில் ‘குழப்பவாதியான’ பெர்சாத்து போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என காலிட் நோர்டினின் ஆணவப் பேச்சை, இந்த மாநில வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஆனால் நெகிரி செம்பிலானில் தேர்தலில் முடிவு தலைகீழாக மாறும் என்பதை அம்னோ தலைமைத்துவம் மறந்துவிட்டது என அவர் சுட்டிக் காட்டினார்.
ஜொகூர் மாநிலம் அம்னோவின் கோட்டையாகும். ஆனால் நெகிரி செம்பிலான் அப்படியல்ல என்பதை தலை கனம் பிடித்த அம்னோ தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


