Saturday, July 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிப்பது சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் – யுனேஸ்வரன்

சிகாமாட்: ஜூலை 20

உள்ளூர் கலைஞர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் வழங்குவது சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாகும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

தேசிய வகை பத்து அன்னாம் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பாலன்ராஜ் இசை இரவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் உள்ளூர் இசைத்துறையில் இசையமைப்பாளர் மற்றும் இசை இயக்குநராகப் புகழ்பெற்ற பாலன்ராஜின் சாதனை, பள்ளிப் பருவத்தில் வளர்க்கப்படும் திறமைகள் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றார்.

நிகழ்ச்சியின்போது, பாலன்ராஜ் இசையமைத்த பாடல்கள் இடம்பெற்ற விரலியையும் துணையமைச்சர் வெளியிட்டார்.

மேலும், தேசிய வகை பத்து அன்னாம் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாக இருந்து தற்போது விமானி, நிறுவன இயக்குநர், கராத்தே பயிற்றுநர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களின் சாதனைகள் உள்ளூர் சமூகத்திற்கும், குறிப்பாக இந்திய சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதுடன், இளம் தலைமுறையினருக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் தங்களது இலக்குகளை நோக்கி பயணிக்க உத்வேகம் அளிப்பதாக யுனேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று, பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்ததுடன், சமூகத்தில் உள்ள கலைத் திறமைகளை வெளிக்கொணரும் மேடையாகவும் அமைந்தது.

நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த தேசிய வகை பத்து அன்னாம் தமிழ்ப்பள்ளி, பாலன்ராஜ் மற்றும் அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் யுனேஸ்வரன் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கவும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கக்கூடிய வாய்ப்புகளை அவர்களுக்கு தொடர்ந்து உருவாக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular