
சுங்கை மூவார் வெள்ளத்தடுப்பு திட்டம் (RTB) கட்டம் 3, பகுதி 1 மற்றும் 2 (சுங்கை ஜெமெந்தா) ஆகியவற்றின் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களைச் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சருமான யுனேஸ்வரன் ராமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலையை மதிப்பீடு செய்வதோடு, உண்மை மற்றும் துல்லியமான தகவல்களை சிகாமாட் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை இந்த ஆய்வு பயணம் நோக்கமாகக் கொண்டது.
குறிப்பாக, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த நம்பிக்கையைக் ஏற்படுத்தியுள்ளது.
சிகாமாட் பகுதி, கடுமையான மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2006-ஆம் ஆண்டு மற்றும் 2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த பெருவெள்ளங்கள் இதன் தீவிரத்தைக் காட்டின. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் மிகப்பெரிய முயற்சியாக இந்த வெள்ளத்தடுப்பு திட்டம் அமல்படுத்தப்படுகின்றது.
RTB கட்டம் 3, பகுதி 1 திட்டத்தின் ஒப்பந்த மதிப்பு RM461 மில்லியனாகவும், மொத்த செலவு RM558 மில்லியனாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோமீட்டர் நீளத்தில் அமையும் இந்தத் திட்டம் 23 ஜூலை 2024 அன்று தொடங்கப்பட்டு, 22 ஜூலை 2029 அன்று நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 35 விழுக்காட்டிற்கும் மேலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முக்கிய பணிகள் நிலம் சுத்திகரிப்பு, நிலப்பணிகள், ஆற்றின் அகல விரிவாக்கம் மற்றும் ஆழப்படுத்தல், அதிவேகக் கால்வாய் அமைத்தல், கரைகள் அமைத்தல் மற்றும் வெளியேற்ற அமைப்புகள் கட்டுமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்தத் திட்டம் கம்போங் செபராங் பத்து படாக், கம்போங் போகோ மற்றும் கம்போங் சோடான் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் சுமார் 22,000 மக்களுக்கு நேரடி நன்மையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சுங்கை ஜெமெந்தாவில் அமைந்துள்ள RTB கட்டம் 3, பகுதி 2 திட்டப்பகுதியையும் யுனேஸ்வரன் ஆய்வு செய்தார். 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2029ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவடையும் என திட்டமிடப்பட்டிருந்தாலும், பணிகளை விரைவுபடுத்தும் முயற்சிகள் காரணமாக 2027ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
ஆய்வின் போது, திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் தயார்நிலையைப் பார்த்து யுனேஸ்வரன் மனநிறையை வெளிப்படுத்தினார். இதற்கு அரசாங்கத் துறைகள், தொழில்நுட்ப பிரிவுகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2023- ஆம் ஆண்டு ஏற்பாட்ட வெள்ளத்தை நேரில் பார்வையிட்டு, உடனடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்த பிரதமருக்குச் சிகாமாட் நாடாளுமன்ற அலுவலகம் நன்றியைத் தெரிவித்து கொள்வதாக யுனேஸ்வரன் கூறினார்.
இந்த RTB திட்டம் ஒரு சாதாரண கட்டுமானத் திட்டமாக அல்லாமல், மக்களின் உயிர், சொத்து மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தேசிய முயற்சியாகும்.
இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், அதன் பலன் மக்களுக்கு முழுமையாக சென்றடைய உறுதி செய்வதாகவும் யுனேஸ்வரன் உறுதியளித்தார்.


