
கோலாலம்பூர் ஆக 15
இந்திய உருமாற்று பிரிவான மித்ராவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஏழை இந்தியர்களுக்கு போய் சேரவில்லை என்பது உறுதியாகி விட்டதாக கெராக்கான் கட்சியின் தேசிய உதவி தலைவர் டத்தோ பரமேஸ்வரன் கணேசன் கூறினார்.
இந்த விவகாரத்தை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட வெ 100 மில்லியன் எட்டு மாதங்கள் கடந்து விட்டது. இருப்பினும் இதுவரை அந்த பணம் வறுமைக் கோட்டில் உள்ள இந்திய சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படுத்தவில்லை என்றார்.
மித்ரா 16 ‘உருமாற்று திட்டங்களுக்கு’ அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த திட்டங்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என மித்ரா அதிகாரிகள் கூறி வருவது வேடிக்கையாக இருப்பதாக அவர் சுட்டி காட்டினார்.
மித்ரா தோற்றுவிக்கப்பட்டு இந்நாள் வரை சர்ச்சைகளில் தான் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மித்ரா விவகாரத்தில் மடானி அரசாங்கத்தின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்? என அவர் வினவினார்.
மித்ரா விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மௌனம் காத்து வருவது வேதனையை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
வறுமைக் கோட்டில் உள்ள ஏழை இந்திய சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மித்ரா முயற்சிகள் எடுத்துக் கொள்ளவில்லை இன்று தோற்றம் ஏற்பட்டுள்ளதாக பரமேஸ்வரன் தெரிவித்தார்.


