
கோலாலம்பூர் ஆக 16
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லியின் மகன் அடையாளம் தெரியாத நபர்களால் குழல் ஊசியால் குத்தி காயப்படுத்தப்பட்ட சம்பவம் கோழைகளின் செயல் என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் சாடினார்.
12 வயதுடைய ஒரு சிறுவனை இவ்வாறு தாக்கப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கடுமையான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை இந்த சம்பவம் காட்டுவதாக அவர் சொன்னார்.
எவ்வித பாவமும் புரியாத ஒரு சிறுவன் குழல் ஊசியால் குத்தி காயப்படுத்தப்பட்டது கொடூரமான செயல் என அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்து சில தினங்களுக்கு முன் புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் தமது தாயாருடன் சென்று கொண்டிருந்த அந்த சிறுவனை அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த இரு நபர்கள் குழல் ஊசியால் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடினர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்நாட்டில் எந்தவொரு பெற்றோரும் பயத்தில் வாழக்கூடாது என அவர் தெரிவித்தார்.
தாங்கள் அரசியலில், அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளதால் தங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து நிலவும் என்று அச்சம் எந்தவொரு பெற்றோருக்கும் இருக்கக் கூடாது என அவர் சொன்னார்.
இந்த கொடூர சம்பவத்தை புரிந்த நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைத்து நிலைகளிலும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பொருளாதார அமைச்சருமான ரபிஸி மகனுக்கு எதிராக தாக்கப்பட்ட இந்த கொடூர செயல், ஒரு குடும்ப பேரிடர் மட்டுமின்றி நாட்டில் குற்ற செயல்கள் துணிச்சலாகவும் திட்டமிட்டும் நடக்கின்றது என்பதை சித்தரிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக நாட்டில் பிரபலமானவர்கள் கடத்தல், குண்டர் கும்பல் தாக்குதல், பணம் கொடுத்து கொலை செய்யப்படும் சம்பவம், ஆயுதமேந்திய கொள்ளை போன்ற கடுமையான குற்றச் செயல்கள் நடப்பதை மக்கள் பார்த்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பாதுகாப்பு நிலையில் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதை இந்த சம்பவங்கள் காட்டுவதாக அவர் சொன்னார்.
மக்கள் பயத்தில் வாழும் ஒரு நாடாக மலேசியா ஒரு நிலைக்கு வருவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என அவர் ஆலோசனை கூறினார்.
வன்செயல், மிரட்டல், கடத்தல் மற்றும் கடுமையான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்ற தகவல் தெளிவாக தெரிய வேண்டும் என்றார் அவர்.
ஆகையால் ரபிஸி மகன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விரைந்து செயல்பட வேண்டும் என சஞ்சீவன் தெரிவித்தார்.


