Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மானியம் நிறுத்தப்பட்டால் முட்டைகளை பயன்படுத்தும் உணவு வகைகளின் விலை உயரும்!

முட்டைகளுக்கான அரசாங்கத்தின் மானியம் நிறுத்தப்பட்டால் முட்டைகளை பயன்படுத்தும் உணவு வகைகளின் விலை உயர்வு காணும் என மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் (போம்கா) எச்சரித்தது.
ஆகையால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் சிந்தித்து செயல்பட வேண்டும் என போம்கா தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன் கூறினார்.
அரசாங்கம் முட்டைகளுக்கான மானியத்தை நிறுத்தினால், ஒரு முட்டையின் விலை 10 காசாக உயரும் என பரவலாக கூறப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
முட்டைகளின் விலை உயர்ந்தால், உணவகங்களில் முட்டைகளை பயன்படுத்தும் உணவு வகைகளான மீ வகைகள் மற்றும் கடைகளில் விற்கும் கேக் வகைகள் நிச்சயம் உயர்வு காணும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விலை ஏற்றும் பயனீட்டாளர்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தும் என அவர் தெளிவுப்படுத்தினார்.
முட்டைகள் தினமும் உணவகங்களில் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான ஒரு பொருள் என அவர் நினைவுறுத்தினார்.
ஆகையால் முட்டைகளுக்கான மானியத்தை நிறுத்துவதற்கு முன்பாக, சரியான நடவடிக்கை என்ன என்பதை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் முட்டைகளுக்கான மானியம் நிறுத்தப்படுவதை தொடர்ந்து குறைந்த விலையிலான சிறப்பு கிரேட் கோழி முட்டைகளை அரசாங்கம் விநியோகம் செய்யும் என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு கூறினார்.
இந்த வகையான முட்டைகளில் உற்பத்தி அதிகரித்தால், மக்களுக்கு போதுமான தேர்வு இருப்பதோடு முட்டைகளின் விலையை நிலைப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் நோன்பு கால மாதத்தின் போது விற்கப்பட்ட மலிவு விலை வகையிலான முட்டைகளின் விநியோகம் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முட்டைகளுக்கான மானியம் நிறுத்தம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நியாயமான விலையில் சிறப்பு கிரேட் முட்டைகளை அறிமுகப்படுத்த முட்டை உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular