
இந்திய கலாச்சார உறவுகள் மன்றம்(ஐசிசிஆர்)இந்தியா, மலேசியா மற்றும் இதர உலக நாடுகளுக்கு இடையிலான கலாச்சார புரிதலை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளதாக மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என் ரெட்டி கூறினார்.
பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மலேசியாவில் இந்திய கலாச்சாரங்களை நிலை நிறுத்துவதில் இந்த மன்றம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சொன்னார்.
நேற்று முன்தினம் இங்கு இந்திய தூதரகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தில் நடைபெற்ற ஐசிசிஆர் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் அவர் பேசினார்.

இந்த மன்றத்தை கடந்த 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி இந்தியாவில் முதலாவது கல்வி அமைச்சர் ஆன மௌலானா அப்துல் கலாம் அஸாத் தோற்றுவித்தார்.
இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு இடையே இந்திய கலாச்சார உறவுகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதே இந்த மன்றத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.
2024-2025-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளின் காணொளி இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த மன்றம் தொடர்ந்து குறிப்பாக மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் என அவர் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுத்ரா அறவாரியத்தின் தோற்றுநோய் பத்மஸ்ரீ டத்தோ ரம்மி இப்ராஹிம், ஐஎன்ஏ அமைப்பைச் சார்ந்த எஸ்.பி நாராயணசாமி சுருதி லாயா ஞானவித்லாயா தேசிய தலைவர் ஸ்ரீ தாஜ்குருஜி சர்மா, நுண்கலை ஆலய தோற்றுனர்கள்-இயக்குனர்கள் வத்ஸலா சிவ தாஸ், ராதா ஷெட்டி, மலேசியாவிற்கான இந்திய துணை தூதர் சுபாஷினி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஐசிசிஆர் உபகாரச் சம்பளத்தில் உயர் கல்வி பெற்று மலேசிய பிரஜைகளான கம்பார்,யூத்தார் பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் ஸ்ரீ வர்ஷினி சங்கர் மற்றும் மு. மகேஸ்வரி ஐசிசிஆர் பற்றி தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

ஐசிசிஆர் உபகாரச் சம்பளத்திற்கு இந்திய தூதரகத்தின் மூலம் மலேசிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் பத்ம நிரித்லயா கலை மையத்தைத் சேர்ந்த மாணவர்களின் மோகினி ஆட்டம், ஷேத்ரா அகடமி படைத்த பரதநாட்டியம் வருகை புரிந்தோரை மகிழ வைத்தது.


