
அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடைகளில் ஜாலூர் கெமிலாங் கொடியின் சின்னத்தை அணிய வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கல்வித்துறையின் தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்துள்ளார்.
ஜாலூர் கெமிலாங் கொடி கொண்ட சின்னத்தை மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடையின் வலதுபுறத்தில் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து அரசாங்க பள்ளிகள், அரசாங்க உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்விக் கூடங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜாலூர் கெமிலாங் கொடி சின்னத்தை மாணவர்கள் அணிவதன் மூலம் நாட்டை நேசிக்கவும், சமூக நல்லிணக்கத்தை மேலோங்க செய்யவும் இது வழிவகுக்கும் என்று அமைச்சு எதிர்பார்ப்பதாக அஸ்மான் அட்னான் குறிப்பிட்டார். பள்ளி மாணவர்களிடையே நாட்டுப்பற்றை விதைப்பதில் கல்வியமைச்சு முனைப்பு காட்டி வருவதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று அவர் விளக்கம் அளித்தார்.
இந்த அறிவிப்பு ஒருபுறம் நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் முயற்சி என்று வரவேற்கப்பட்டாலும், மறுபுறம் இது மாணவர்களின் மீது ஒரு குறிப்பிட்ட கருத்தியலை திணிக்கும் நடவடிக்கை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. பள்ளி சீருடையில் கொடி சின்னத்தை அணிவது மாணவர்களின் தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் பாதிக்குமா? அல்லது இது ஒற்றுமை மற்றும் தேசப்பற்றை வளர்க்க உதவுமா? என்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


