
கடந்த 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உள்நாட்டு சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து 66.8 லட்சம் சுற்றுப் பயணிகளைப் பதிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் அவர்கள் செய்த செலவும் 21.9 விழுக்காடு அதிகரித்து 2.9 கோடி வெள்ளியை எட்டியுள்ளது என்று புள்ளிவிவரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரத் துறையின் இந்த அறிக்கை கடந்த 2024-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மலேசிய உள்நாட்டு சுற்றுலா ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாவின் வலுவான செயல்திறன் நான்காம் காலாண்டிலும் தொடர்ந்தது.
இதன் வழி இந்த ஆண்டிற்கான மொத்த சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 26.01 கோடி பேராக உயர்ந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 21.7 விழுக்காடு அதிகமாகும் என்று தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ முஹம்மத் உஸிர் மஹிடின் தெரிவித்தார்.
வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் உள்நாட்டு சுற்றுலா செலவினம் 107.2 கோடி வெள்ளியை எட்டியது. இது ஆண்டுக்கு ஆண்டு 26.3 விழுக்காடு என்ற அளவிலான உறுதியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.


