
பெட்டாலிங் ஜெயா மார்ச் 24
விரைவில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேற்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
தமது இந்த முடிவு குறித்து பிரதமரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் தெரிவித்து விட்டதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
நாடு தழுவிய நிலையில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் இது குறித்து தாம் கலந்தாலோசித்து விட்டதாக பிகேஆர் சுங்கை பூலோ தொகுதி தலைவருமான அவர் தெரிவித்தார்.
‘அனைத்து நிலையிலும் கட்சியை வலுப்படுத்துவது எனது இலக்கு’ என்றார் அவர்.
மலேசியா மடானி கொள்கைக்கு இணையாக நமது போராட்டம் இருக்க வேண்டும் என அவர் சுட்டி காட்டினார்.
கடந்த 2022 கட்சித் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஸாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண், மத்திய அமைச்சர்களான நிக் நஸ்மி மற்றும் சாங் லீ காங் பிகேஆர் உதவித் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மீண்டும் தங்களின் பதவியை தக்க வைத்துக் கொள்ள போவதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.
பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வார் மற்றும் பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் ஃபாமி பாட்சில் அறிவித்துள்ளனர்.


