
மியான்மார் அதிபர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் மலேசியாவிற்கு வருகை தந்துள்ளதை முன்னிட்டு அவரை வரவேற்கும் நிகழ்வில் ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் பொதுவான முக்கிய விவரங்கள் குறித்து கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக யுனேஸ்வரன் கூறினார்.
குறிப்பாக மியான்மாரில் நிலவும் மனிதாபிமான பிரச்சனைகள் மற்றும் மலேசியாவில் உள்ள மியான்மார் அகதிகள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அமைதி மட்டும் நல்லிணக்கத்தை நிலை நிறுத்தும் நாடாக, சிறந்த தீர்வுகளை தேடும் முயற்சியில் மலேசியா எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் அணுகுமுறைக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து நிலவும் இரு தரப்பு உறவுகளும் ஒத்துழைப்பும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்கும் தொடர்ந்து பங்களிக்கட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மியன்மார் அகதிகள் பிரச்சினை இந்நாட்டில் நீண்ட காலமாக இருந்து வருவதால், அதற்கான நல்லதொரு தீர்வு பிறக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மடானி அரசாங்கத்தின் அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


