Thursday, October 8, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பெற்றோருக்கு அருகில் வீடு வாங்கும் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

2027 பட்ஜெட்டில் சேர்க்க REACH வலியுறுத்தல்

கோலாலம்பூர், அக். 8 – பெற்றோருக்கு அருகில் வீடு வாங்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவி அல்லது ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, அதனை 2027 பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும் என சமூக முன்னேற்றம் மற்றும் வீடமைப்புக்கான வள மையம் (REACH) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் REACH முன்வைத்த இந்தப் பரிந்துரையை தற்போது நடைமுறைப்படுத்தக்கூடிய கொள்கையாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ’ இஸ்கந்தர் அப்துல் சமாட் தெரிவித்தார்.

நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் நலனை அரசு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் அல்லது சமூகநல உதவிகளை மட்டுமே நம்பி பாதுகாக்க முடியாது என்றும், முதியோரைப் பராமரிப்பதில் குடும்ப அமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெற்றோருக்கு அருகில் பிள்ளைகள் வீடு வாங்குவதற்கு அரசு உதவி வழங்குவது ஒரு நடைமுறைத் தீர்வாக அமையும். இதன் மூலம் வயது முதிர்ந்த பெற்றோரின் அன்றாட தேவைகள், சுகாதாரம் மற்றும் நலனை பிள்ளைகள் எளிதாக கவனிக்க முடியும்.

எனவே, பெற்றோரின் வீட்டிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்குள் வீடு வாங்கும் பிள்ளைகளுக்கு வீடு வாங்கும் மானியம் அல்லது ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என REACH முன்மொழிந்துள்ளது.

பெற்றோர் அதே வீட்டில் பிள்ளைகளுடன் வசிக்கும் சூழ்நிலையில் கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதையும் பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகையின் அளவு, வீட்டின் விலை வரம்பு, வருமான வரம்பு மற்றும் பெற்றோரின் வீட்டிலிருந்து இருக்க வேண்டிய தூரம் ஆகியவற்றை மலேசியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப அரசு நிர்ணயிக்கலாம்.

சிங்கப்பூரில் இதுபோன்ற அணுகுமுறை Proximity Housing Grant (PHG) திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பெற்றோர் அல்லது பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசிக்க வீடு வாங்குவோருக்கு அதிகபட்சம் S$30,000, அதேவேளை பெற்றோர் அல்லது பிள்ளைகளின் வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வீடு வாங்குவோருக்கு அதிகபட்சம் S$20,000 வரை வழங்கப்படுகிறது.

மலேசியா இந்தத் திட்டத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், குடும்ப அமைப்பையும் முதியோரின் நலனையும் வலுப்படுத்துவதற்கான வீடமைப்புக் கொள்கையாக இதன் அடிப்படைக் கொள்கை கவனிக்கப்பட வேண்டும் என REACH தெரிவித்துள்ளது.

இது வெறுமனே வீடு வாங்குவதற்கான உதவி அல்ல; இது ஒரு சமூக முதலீடு என்றும் REACH குறிப்பிட்டுள்ளது.

பிள்ளைகள் பெற்றோருக்கு அருகில் வசித்தால், அவசரநிலை ஏற்படும் போது உதவுவது, மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, அன்றாட தேவைகளை கவனிப்பது உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ள முடியும். இதன் மூலம் பெற்றோர் குடும்ப ஆதரவின்றி தனிமையில் வாழும் நிலையும் குறையக்கூடும்.

நீண்ட காலத்தில், இத்தகைய அணுகுமுறை சமூகநல அமைப்புகளின் மீதான அழுத்தத்தையும் முதியோர் நிறுவனப் பராமரிப்புக்கான தேவையையும் குறைக்க உதவக்கூடும்.

முதியோரின் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்தும் வகையில் முதியோர் சட்டமூலம் (RUU Warga Emas) தயாரிக்கப்பட்டு வருவதை REACH வரவேற்றுள்ளது.

எனினும், சட்டத்தின் மூலம் வழங்கப்படும் பாதுகாப்புடன், குடும்பங்கள் தங்களது வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரிக்க உதவும் ஊக்கத்தொகைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என REACH தெரிவித்துள்ளது.

“பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் என்ன பொறுப்பு உள்ளது?” என்பதுடன், “அந்தப் பொறுப்பை நிறைவேற்ற பிள்ளைகளுக்கு அரசு எத்தகைய ஆதரவை வழங்க முடியும்?” என்பதையும் கேட்க வேண்டும் என REACH வலியுறுத்தியுள்ளது.

எனவே, 2027 பட்ஜெட்டை முன்னிட்டு, ‘பெற்றோருக்கு அருகில் வசிப்பதற்கான ஊக்கத்தொகைத் திட்டம்’ ஒன்றை தேசிய வீடமைப்பு மற்றும் முதியோர் நலக் கொள்கையின் ஒரு பகுதியாக அரசு பரிசீலிக்க வேண்டும் என REACH கோரியுள்ளது.

இந்தத் திட்டத்தை முதலில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலக்காகக் கொண்டு செயல்படுத்தி, அதன் பயன்தன்மையை மதிப்பீடு செய்த பின்னர் விரிவுபடுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027 பட்ஜெட்டில் முதியோர் பிரச்சினையை நிதியுதவி மற்றும் பராமரிப்பு என்ற கோணத்தில் மட்டுமல்லாமல், அவர்கள் அன்புடனும் அக்கறையுடனும் கவனிக்கும் குடும்பத்தினருக்கு அருகில் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையிலும் அணுக வேண்டும் என REACH தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular