
எதிர் வரும் 16 ஆவது ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரத்தை பெர்சாத்து கட்சி நேற்று தொடங்கியது.
இந்த தொடக்க விழாவில் பெர்சாத்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
‘ஜொகூரருக்கு ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளுடன் இந்த தொடக்க விழா தொடங்கியது.
பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சி கூட்டணியின் துணைத்தலைவரும் பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின், கட்சியின் இதர உயர்மட்ட தலைவர்கள் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன்,அசுமு, அஸ்மின் அலி,ராட்ஷி ஜிடின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் ஒரு நல்ல தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பதாக இங்கு திரண்டு வந்த மக்களின் எண்ணிக்கை பிரதிபலிப்பதாக பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவருமான டத்தோஸ்ரீ சஞ்சீவன் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடினின் தலைமைத்துவத்தை மக்கள் மீண்டும் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பெர்சாத்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முக்கிய பங்காளி கட்சி என்பதால், ஜொகூர் மாநில வாக்காளர்கள் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நாட்டில் உள்ள பல இன மக்களிடையே பெர்சாத்து கட்சி நல்ல வரவேற்பை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெர்சாத்து கட்சிக்கு வாக்காளர்களின் ஆதரவு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


