
ஏர் ஆசியா குழுமத்தின் (AirAsia Group Berhad) புதிய குழுமத் தலைமை நிதி அதிகாரியாக (Group Chief Financial Officer) தேஹ் முன் ஹுய் (Teh Mun Hui) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
விமானப் போக்குவரத்து மற்றும் பெருநிறுவன நிதித்துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள தேஹ் முன் ஹுய், ஏர் ஏசியா குழுமத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, கேப்பிட்டல் ஏ பெர்ஹாட்டின் (Capital A Berhad) குழுமத் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பு வகித்த அவர், அந்நிறுவனத்தின் நிதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும், PN17 நிலையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறியதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மேலும், ஏர் ஆசியா ஏவியேஷன் குழுமத்தின் (AirAsia Aviation Group Limited) தலைமை நிதி அதிகாரியாகவும் அவர் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதன் மூலம் விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் கேப்பிட்டல் ஏ குழுமத்தின் ஒட்டுமொத்த வர்த்தகச் செயல்பாடுகள் குறித்த ஆழமான புரிதலை அவர் பெற்றுள்ளார்.
இதுகுறித்துக் கருத்துரைத்த ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி போ லிங்கம் (Bo Lingam), நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி முன்னுரிமைகள் குறித்து நன்கு அறிந்தவராக தேஹ் முன் ஹுய் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும், பங்குதாரர்களுக்கு நிலையான வருவாயை உறுதிசெய்வதிலும் அவரது நிதித்துறை தலைமைத்துவமும் அனுபவமும் பெரும் துணையாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளை, இதுவரை குழுமத்தின் நிதிப் பிரிவுக்குத் தலைமை ஏற்று அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கர் சுவானுக்கும் (Kar Chuan) அவர் நன்றி தெரிவித்ததோடு, அவரது எதிர்காலப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதற்கிடையில், புதிய பொறுப்பை ஏற்றுள்ள தேஹ் முன் ஹுய், ஏர் ஏசியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றிருப்பது பெருமையளிப்பதாகக் கூறினார்.
நிறுவனத்தின் தற்போதைய வலுவான அடித்தளத்தை மேலும் மேம்படுத்தி, தலைமைத்துவக் குழுவுடன் இணைந்து வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லத் தாம் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, 2025ஆம் ஆண்டில் ஃபார்ச்சூன் (Fortune) இதழ் வெளியிட்ட ஆசியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தேஹ் முன் ஹுய் இடம்பெற்றிருந்தார். அப்பட்டியலில் இடம்பெற்ற நான்கு மலேசியர்களில் அவரும் ஒருவராவார்.
ஏர் ஏசியா குழுமத்தின் விமானப் போக்குவரத்து வர்த்தகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நிறுவனம் பயணிக்கும் நிலையில், அவரது நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


