Wednesday, November 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நந்தகோபால் பெற்ற அங்கிகாரம், மலேசியாவிற்குக் கிடைத்த பெருமை – தியோ புகழாரம்.

கோலாலம்பூர், நவ 25

மலேசிய இளம் நடிகரான நந்தகோபால் மோகன், தைவானின் நடைபெற்ற 63ஆவது கோல்டன் ஹார்ஸ் விருது விழாவில் சயாங் சயாங் திரைப்படத்தின் மூலம் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை வென்றிருப்பது, மலேசியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒரு மகத்தான சாதனையாகும்.

இந்த வெற்றியானது மலேசியக் கலைஞர்களின் திறமையும், குறிப்பாக இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த கலைத்துறையினரின் ஆற்றலும் அனைத்துலக அளவில் போட்டியிட்டு அங்கீகாரம் பெறும் திறன் கொண்டவை என்பதை நிரூபித்துள்ளதாக தொடர்புத் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

“நந்தகோபாலுக்கு எனது மனமார்ந்த பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அங்கீகாரம் அவரது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்லாமல், உள்ளூர் கலைஞர்கள் தொடர்ந்து சிறந்த படைப்புகளை உருவாக்கி மலேசியாவை உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஓர் உந்துசக்தியாகவும் அமைகிறது,” என்றார்

“இந்த வெற்றி, பின்னணி வேறுபாடுகளைக் கடந்து மேலும் பல இளம் திறமையாளர்கள் திரைப்படத் துறையில் கால்பதித்து, தரமான படைப்புகளை உருவாக்குவதற்கான ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்,” என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விருதளிப்பு விழாவில் டெட் டைட் திரைப்படத்திற்காக கார்த்திக் விஜய் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும், கோன் வித் தி டைட் பாடல் சிறந்த திரைப்பட பாடலுக்கான விருதையும் வென்றுள்ளன. அதேவேளையில், நைட் ஜர்னி திரைப்படத்திற்காக இயக்குனர் சாய் மிங் லியாங் சிறந்த குறும்பட ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளார்.

மேலும், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் நிறுவனம் (ஃபினாஸ்) மூலம் சயாங் சயாங் மற்றும் டெட் டைட் ஆகிய திரைப்படங்கள் உள்நாட்டுத் திரைப்படப் பிரிவின் கீழ் மலேசியாவில் திரைப்படத் தயாரிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் வாயிலாக மொத்தம் ரி.ம.2.6 மில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வெற்றிகள், மலேசியத் திரைப்படத் துறையில் சிறந்த திறமைகளும் வளர்ச்சிக்கான பெரும் ஆற்றலும் இருப்பதை எடுத்துக்காட்டுவதுடன், அனைத்துலக அளவில் தொடர்ந்து அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகளையும் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, உள்நாட்டுத் திரைப்படங்களுக்கும் நாட்டின் படைப்பாற்றல் துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular