
கோலாலம்பூர், நவ 18
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகிய இருவரும் பெட்டாலிங் ஸ்திரீட்டிற்கு மேற்கொண்ட நடை பயணத்தின் போது, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை புரிந்ததை மலேசிய இந்து சங்கம் வரவேற்கிறது. இத்தகைய வருகை மலேசிய சமயப் பன்முகத்தன்மை, பல்லின பண்படாட்டு பாரம்பரியம் மற்றும் பரஸ்பர ஏற்படுமே ஆகியவற்றை வரவேற்றுத்தக்க நிகழ்வு என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷண் தங்க கணேசன் கூறினார்.
இருப்பினும், அவ்விரு தலைவர்கள் உட்பட வருகை புரிந்த குழுவினரில் ஏறக்குறைய அனைவரும் ஆலய வளாகத்திற்குள் இருந்த நேரம் முழுவதும் காலணிகளை அணிந்திருந்தது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.
இந்து சமய மரபின்படி, ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்பு காலணிகளைக் கழற்றுவது வெறும் பண்பாட்டு வழக்கமன்று. அது தூய்மை, பணிவு, பக்தி மற்றும் வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தன்மைக்கு அளிக்கப்படும் மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமய நெறிமுறையாகும். உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களில் இந்நடைமுறை பின்பற்றப்படுகின்றது. கடும் குளிர் நிலவும் நாடுகளில்கூட காலணிகளைக் கழற்றும் நடைமுறை பின்பற்றப்படுவதுடன், தேவைக்கேற்ப காலுறைகளை அணிந்துகொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றது.
வருகை புரிந்த குழுவினர் ஆலயத்தின் கருவறைக்குள் செல்லவில்லை என்றாலும், ஓர் இந்து ஆலயத்தின் புனிதத்தன்மை அதன் கருவறையுடன் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இராஜகோபுரத்தைக் கடந்து அமைந்துள்ள பகுதிகளும் ஆலயத்தின் புனித வளாகத்திற்கு உட்பட்டவையே ஆகும். அவ்விரு தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்ட இடமானது, இறைவனின் உள்வீதி உலா நடைபெறும் பகுதியாகும். அதன் அருகிலேயே புனித ஹோம குண்டமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் சமய மரபுகளையும் நெறிமுறைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்ட ஆலய நிர்வாகம், இவ்வடிப்படைச் சமய நெறிமுறை குறித்து வருகை புரிந்த குழுவினருக்கு உரிய முறையில் அறிவுறுத்தியதாகத் தெரியவில்லை என்பது மேலும் ஏமாற்றமளிக்கின்றது. அரசுமுறை நடைமுறைகள், பாதுகாப்புக் காரணங்கள் அல்லது வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகக் காலணிகளைக் கழற்ற இயலாத சூழல் இருந்திருந்தால், ஆலயத்தின் புனிதத்தன்மைக்கும் வருகையின் முக்கியத்துவத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இராஜகோபுரத்திற்கு வெளியிலேயே வரவேற்பு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்வுகளை நடத்தியிருக்கலாம்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய மரியாதையும் சமய உணர்வுகளுக்கான அங்கீகாரமும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சமமாக வழங்கப்படுகின்றனவா என்ற முக்கியமான கேள்வியை இந்நிகழ்வு எழுப்புகின்றது.
பரஸ்பர மரியாதை என்பது பாரபட்சமுடையதாக இருக்கக்கூடாது. பிற சமயங்களின் மரபுகளையும் சமய உணர்வுகளையும் நாம் எவ்வாறு மதிக்கின்றோமோ, அதே அளவிலான மரியாதையும் அங்கீகாரமும் இந்து சமய மரபுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
ஒருவர் எத்தகைய பதவியையோ, அந்தஸ்தையோ, செல்வாக்கையோ அல்லது அதிகாரத்தையோ கொண்டிருந்தாலும், ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைந்துவிட்டால், அவ்வழிபாட்டுத் தலத்திற்குரிய சமய மரபுகளையும் நெறிமுறைகளையும் பின்பற்றுவது அவசியமாகும். எந்தவொரு அரசியல் பதவியோ, அரசுமுறை அந்தஸ்தோ அல்லது அதிகாரமோ, ஒருவரை வழிபாட்டுத் தலத்தின் அடிப்படைச் சமய நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவராக ஆக்கிவிடக்கூடாது.
மலேசிய இந்து சங்கத்தின் இக்கருத்தானது, இவ்வருகையின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கோ அல்லது அவ்விரு தலைவர்களின் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவதற்கோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். ஆலயங்களின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதும், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்து சமய நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதுமே எமது நோக்கமாகும்.
எனவே, எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை புரியும்போது, அத்தலங்களுக்குரிய சமய நெறிமுறைகள் குறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தெளிவாக அறிவுறுத்தப்படுவதையும், அவை முறையாகப் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள், அரசுமுறை நெறிமுறை அதிகாரிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் குறிப்பாக ஆலய நிர்வாகங்களை மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொள்கின்றது.
சிறப்புப் பிரமுகர்களை வரவேற்று உபசரிப்பதும், ஆலயத்தின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கடமைகள் அல்ல என்பதை ஆலய நிர்வாகங்கள் உணர வேண்டும். ஒன்றிற்காக மற்றொன்றை விட்டுக்கொடுக்காமல், இவ்விரு கடமைகளையும் நிறைவேற்றுவது சாத்தியமானதும் அவசியமானதுமாகும்.
மலேசியாவின் வலிமை அதன் சமயப் பன்முகத்தன்மையில் மட்டுமல்லாது, ஒவ்வொரு சமுதாயத்தின் தனித்துவமான சமய மரபுகளையும் மதித்துப் பாதுகாப்பதில் அதன் மக்களும் தலைவர்களும் கொண்டுள்ள உறுதிப்பாட்டிலும் அடங்கியுள்ளது. அத்தகைய மரியாதை வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, செயல்களிலும் வெளிப்பட வேண்டும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சமமான மரியாதைக்கு உரியவை. வருகை புரிபவர்களின் அந்தஸ்திற்கேற்ப ஒரு வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தன்மை மாறுவதில்லை. பதவி, புகழ் அல்லது அதிகாரத்தின் காரணமாகச் சமய நெறிமுறைகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படக்கூடாது என அவர் கூறினார்.


