Wednesday, November 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலாக்கா மாநிலத் தேர்தல் வெற்றியை நியாயமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக மாற்ற வேண்டும்!

கோலாலம்பூர், நவ 18

கோலா திரெங்கானு – பாஸ் தலைவர், ஹாடி அவாங், மலாக்கா மாநிலத் தேர்தல் முடிவுகள், உம்மத் ஒற்றுமைக்கான முயற்சிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், நியாயமான, மக்கள் நலன் சார்ந்த மற்றும் பல இன மக்களின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் ஓர் ஆட்சிக்கான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மலாக்காவுக்கு நன்றி” (Terima Kasih Melaka) என்ற தலைப்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில், இத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) ஆகிய கூட்டணிகளுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்கிய மலாக்கா மாநில மக்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, தேர்தல் முடிவுகள் வெறும் அரசியல் வெற்றியாகக் கொண்டாடப்படாமல், உண்மையிலேயே மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளாக மாற்றப்பட வேண்டும்.

“இந்தத் தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமான செய்தியை எடுத்துரைக்கின்றன. குறிப்பாக, உம்மத் ஒற்றுமைக்கான முயற்சிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், நியாயமான, மக்கள் நலன் சார்ந்த மற்றும் பல இன மக்களின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் ஓர் ஆட்சியைக் காண வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகின்றன,” என்று அவர் நவம்பர் 14ஆம் தேதி நள்ளிரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் வழங்கியுள்ள நம்பிக்கையும் பொறுப்பும் மிகப் பெரியது என்பதை பாஸ் கட்சி உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அப்துல் ஹாடி, மக்கள் நலன், நேர்மை மற்றும் அனைவருக்கும் நீதி வழங்கும் கொள்கைகளின் அடிப்படையில் இந்த வெற்றியைச் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் கடுமையாக உழைத்த பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேஷனல் தலைமைத்துவங்கள், போட்டியிட்ட வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தேர்தல் காலம் முழுவதும் அனைத்து தரப்பினரும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் ஒற்றுமை உணர்வு ஆகியவை தேர்தல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த வெற்றி பொறுப்புணர்வுடன் கூடிய மக்கள் சேவைக்கான புதிய தொடக்கமாக அமைய வேண்டும் என்றும், மக்கள் வழங்கிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு தலைவரும் நேர்மை மற்றும் நீதி ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அல்லாஹ் இந்த வெற்றிக்கு அருள் புரிவானாக. பொறுப்பேற்றுள்ள ஒவ்வொரு தலைவரின் அடிகளையும் வழிநடத்தி, முழுமையான நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கான வலிமையையும் வழங்குவானாக,” என்று அவர் தெரிவித்தார்.

இறுதியாக, தனது அறிக்கையை “இஸ்லாமியத் தீர்வுகள் வெற்றியை நிரப்ப வேண்டும்” (Penyelesaian Islam Mengisi Kemenangan) என்ற முழக்கத்துடன் நிறைவு செய்த அப்துல் ஹாடி, அரசியல் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சிமுறை, மக்கள் நலன் மற்றும் சமூக நீதியில் இஸ்லாமியக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற செய்தியையும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular