Wednesday, November 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷண் தங்க கணேசன் அவர்களின் தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தி!

அன்பிற்கினிய மலேசிய வாழ் இந்துப் பெருமக்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

இருள் அகன்று ஒளி பிறக்கும் தீபாவளித் திருநாள், தீமையை நன்மை வெல்வதையும், அறியாமையை அறிவு வெல்வதையும் உணர்த்தும் உன்னதமான திருநாளாகும். இந்நன்னாளில் நமது உள்ளங்களில் அன்பு, கருணை, ஒழுக்கம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய நற்பண்புகள் ஒளிரட்டும்.

அளவோடு கொண்டாடுவோம்; பிறரின் மகிழ்ச்சியிலும் பங்கெடுப்போம்!

தீபாவளியை நமது பொருளாதார வசதிக்கேற்ப எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவோம். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும், கடன் வாங்கிப் பண்டிகை கொண்டாடுவதையும் தவிர்ப்போம். நமது செலவில் ஒரு பகுதியை வறிய குடும்பங்கள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு வழங்கி, அவர்களுக்கும் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்வோம்.

அதேவேளையில், மதுபானங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான முறையில் பண்டிகையைக் கொண்டாடுவோம். நமது குடும்பத்தின் நிம்மதியையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.
குடும்ப ஒற்றுமையையும் இன நல்லிணக்கத்தையும் வளர்ப்போம்!

தீபாவளி குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் ஒரு சிறந்த தருணமாகும். பெற்றோர், பெரியோர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றிணைந்து மகிழ்வோம். நமது பாரம்பரியத்தையும் சமய விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், நமது மலாய், சீன, பூர்வகுடி மற்றும் இதர இன நண்பர்களுடன் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம். பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையின் மூலம் நமது நாட்டின் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவோம்.

மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் என்ற முறையில், நமது இந்தியச் சமுதாயம் கல்வி, பொருளாதாரம், ஆன்மிகம், பண்பாடு மற்றும் சமூகநலம் ஆகிய துறைகளில் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

நமது பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும்; இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாக வேண்டும்; பெண்கள் வலிமை பெற வேண்டும். நமது ஆலயங்கள் ஆன்மிக வளர்ச்சியுடன் சமூக ஒற்றுமை மற்றும் அறப்பணிகளுக்கும் மையங்களாகத் திகழ வேண்டும்.

இலட்சிய வேறுபாடுகளைக் கடந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு, நமது சமுதாயத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம். கல்வியில் சிறந்த, பொருளாதாரத்தில் வலிமையான, பண்பாட்டைப் போற்றும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் சமுதாயமாக மலேசிய இந்தியர்கள் உயர வேண்டும் என்பதே எனது கனவாகும்.

இந்தத் தீபாவளியில் நமது இல்லங்களில் ஏற்றப்படும் தீபங்கள், நமது உள்ளங்களிலும் ஒளியேற்றட்டும். குடும்பங்களில் அமைதியும், சமுதாயத்தில் ஒற்றுமையும், மலேசியாவில் இன நல்லிணக்கமும் என்றும் நிலைத்திருக்கட்டும்.

அன்பைப் பகிர்வோம்! அறத்தை வளர்ப்போம்! ஒற்றுமையுடன் உயர்வோம்!

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

நன்றி. வணக்கம்.

ஸ்ரீ காசி சங்கபூஷண் தங்க கணேசன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular