
செபாங், நவ 2
ஆண்டு இறுதி விடுமுறைக் காலத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பருவகால வானிலை மாற்றங்கள் காரணமாகப் பயணத் திட்டங்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, விமானப் பயணத்திற்குப் போதிய நேரத்தை ஒதுக்குமாறு AirAsia அறிவுறுத்தியுள்ளது.
மலேசியாவின் வடகிழக்குப் பருவமழை 2026 அக்டோபர் 27ஆம் தேதி முதல் 2027 மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும்.
இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், இடியுடன் கூடிய மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் வானிலை மற்றும் பயண அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பயணம் சுமுகமாக அமைய AirAsia வழங்கும் முக்கிய அறிவுறுத்தல்கள்:
1. விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வருகை தரவும்
சர்வதேச விமானப் பயணங்களுக்கு விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பும், உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 2 மணி நேரத்திற்கு முன்பும் விமான நிலையத்தைச் சென்றடைய வேண்டும்.
குழுவாகப் பயணம் செய்பவர்கள் உட்பட அனைத்து பயணிகளும் AirAsia MOVE செயலி அல்லது airasia.com மூலம் சுயமாக Check-in செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். விமானம் புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பிருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை Check-in செய்யலாம்.
2. விமானப் பயண நிலையைச் சரிபார்க்கவும்
விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பும், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பும் AirAsia இணையதளத்தின் Flight Status பகுதியில் விமான நிலவரத்தைச் சரிபார்க்க வேண்டும்.
3. விமான நிலையத்திற்குச் செல்ல கூடுதல் நேரம் ஒதுக்கவும்
கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாகப் பயண நேரம் அதிகரிக்கலாம். எனவே, பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
KLIA2 விமான நிலையத்திற்குச் சிரமமின்றிச் செல்ல Express Rail Link (ERL) ரயில் சேவையைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4. விமான நிலையத்தில் உள்ள சுயசேவை இயந்திரங்களைப் பயன்படுத்தவும்
பயணிகள் விமான நிலையத்தில் உள்ள Kiosk இயந்திரங்கள் மூலம் பயணப் பொதிகளுக்கான அடையாளச் சீட்டுகளை அச்சிட்டு, சுயமாகப் பொதிகளை ஒப்படைக்கலாம் (Self Bag Drop).
நடமாடுவதில் சிரமம் உள்ளவர்கள், 24 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் தனியாகப் பயணம் செய்யும் சிறுவர்கள் ஆகியோருக்கு மட்டுமே கவுன்டர் Check-in சேவை வழங்கப்படும்.
5. தொடர்பு விபரங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும்
முக்கியமான விமான அறிவிப்புகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்காக, முன்பதிவில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் சரியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
6. வானிலை நிலவரங்களைக் கண்காணிக்கவும்
மோசமான வானிலையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் பயணிகள், உள்ளூர் வானிலை முன்னறிவிப்புகளைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
7. பயண ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்தவும்
கடவுச்சீட்டு (Passport), விசா மற்றும் தேவையான ஏனைய பயண ஆவணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சர்வதேசப் பயணம் மேற்கொள்ளும் மலேசியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், KLIA Terminal 2 இல் குடிவரவு நடைமுறைகளை விரைவாக நிறைவு செய்வதற்கு MyNIISe அல்லது MyBorderPass செயலிகளை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, பயணத்திற்கு முன்னர் அவற்றின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
8. விமானச் சேவை பாதிக்கப்பட்டால் மாற்று வழிகளை அறிந்து கொள்ளவும்
விமானப் பயணத்தில் தாமதம் அல்லது ரத்துச் செய்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், பயணிகள் தங்களது மின்னஞ்சலைச் சரிபார்த்து, வழங்கப்படும் புதிய அறிவிப்புகள் மற்றும் சுயசேவை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன், மேலதிக உதவிகளுக்கு AirAsia நிறுவனத்தின் Chatbot சேவையான Bo-வையும் தொடர்புகொள்ளலாம்.
9. சிறப்பு உதவி தேவைப்படுவோர் முன்பதிவு செய்யவும்
நடமாடுவதில் சிரமம் உள்ள பயணிகள், விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அல்லது AirAsia MOVE செயலியில் உள்ள “My Bookings” பகுதி மூலம் விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்பாக சக்கர நாற்காலி உள்ளிட்ட சிறப்பு உதவிகளை முன்பதிவு செய்யலாம்.
10. கைப்பையில் எடுத்துச் செல்லும் பொதிகளின் அளவைக் கவனிக்கவும்
ஒவ்வொரு பயணியும் அதிகபட்சமாக ஒரு கைப்பையை (56 x 36 x 23 செ.மீ. அளவைத் தாண்டாமல்) எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அத்துடன் ஒரு மடிக்கணினிப் பை அல்லது கைப்பை அல்லது சிறிய பை ஆகியவற்றில் ஒன்றையும் எடுத்துச் செல்லலாம்.
இரண்டு பொதிகளின் மொத்த எடை 7 கிலோகிராமைத் தாண்டக்கூடாது.
11. கர்ப்பிணிப் பயணிகளுக்கான அறிவுறுத்தல்கள்
கர்ப்பிணிப் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான நிலைய கவுன்டரில் வழங்கப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
27 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
AirAsia நிறுவனம் தொடர்ந்து விமானச் செயல்பாடுகள் மற்றும் வானிலை நிலவரங்களைக் கண்காணித்து, பாதிக்கப்படும் பயணிகளுக்கு அவர்களது முன்பதிவில் வழங்கப்பட்டுள்ள தொடர்பு விபரங்கள் மூலம் தேவையான அறிவிப்புகளை வழங்கும்.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரினதும் பாதுகாப்பும் நலனுமே AirAsia நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்.
எனவே, இந்தக் காலப்பகுதியில் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, தகவல்களைத் தொடர்ந்து அறிந்து, பயண ஏற்பாடுகளில் கூடுதல் நேரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் கடைப்பிடிக்குமாறு AirAsia கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்கள் மற்றும் அண்மைய அறிவிப்புகளுக்கு AirAsia நிறுவனத்தின் உத்தியோகபூர்வ Instagram மற்றும் X சமூக வலைத்தளப் பக்கங்களைப் பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இனிய விடுமுறைக் கால வாழ்த்துகள்! பாதுகாப்பான பயணமாக அமையட்டும்!


