
கோலாலம்பூர்,அக் 21
வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தும் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பதற்குப் பதிலாஅ, அவர்களை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின்போது, பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியின் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன், நியூ பந்தாய் விரைவுச்சாலைக்கு அருகிலுள்ள ஒரு கோயிலில் மதச் சிலைகள் உடைக்கப்பட்ட அண்மைய சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.
வழிபாட்டுத் தலங்களை அவமதித்துச் சேதப்படுத்துவோர் மீது அதிகாரிகள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“குற்றவாளிகளுக்குப் பிணை வழங்க வேண்டாம். நிலைமையைச் சிக்கலாக்கும் வேறு எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம். நேரடியாகச் சிறைக்கு அனுப்புங்கள். இதுவே அரசாங்கத்திற்கு நான் முன்வைக்கும் பரிந்துரை,” என்று அவர் தெரிவித்தார்.
மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்துவது, குற்றவியல் சட்டத்தின் 295ஆவது பிரிவின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இது தொடர்பாக ஃப்ரீ மலேசியா டுடே (FMT) செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபாகரன், பொதுமக்களின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்காக, மதத்தை அவமதிப்பது தொடர்பான இத்தகைய குற்றங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை நீக்கிவிட்டு, சிறைத்தண்டனை வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


