Friday, October 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாசிர் கூடாங், தாப்பாவில் சரக்கு ரயில் முனையங்கள் – ஆண்டுக்கு 7 லட்சம் லாரிப் பயணங்களைக் குறைக்க இலக்கு

நாட்டில் ரயில் வழி சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜொகூர் மாநிலத்தின் பாசிர் கூடாங் மற்றும் பேராக் மாநிலத்தின் தாப்பா ஆகிய இடங்களில் உள்ள இரண்டு சரக்கு மைய முனையங்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும், ரயில்வே சொத்துக் கழகம் (RAC) மற்றும் Infinity Logistics & Transport Sdn. Bhd. நிறுவனம் இடையே மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கோலாலம்பூர் மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெற்ற Transport Expo Asia (TXA) 2026 நிகழ்வையொட்டி, இந்த ஒப்பந்தப் பரிமாற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

RAC தலைமைச் செயலதிகாரி டத்தோ அஸ்ஹார் அஹ்மத், அக்கழகத்தின் சார்பிலும், Infinity Logistics & Transport நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஈத்தன் குவான் சியூ டீக், நிறுவனத்தின் சார்பிலும் ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் மற்றும் போக்குவரத்து அமைச்சின் பொதுச் செயலாளரும் RAC இயக்குநர் வாரியத் தலைவருமான டத்தோஸ்ரீ ஜானா சந்திரன் முனியாயன் ஆகியோர் சாட்சியாக இருந்தனர்.

இந்த ஒத்துழைப்பு, ஏற்கெனவே உள்ள ரயில் வலையமைப்புடன் இணைக்கப்பட்ட சரக்கு மைய முனையங்களை மேம்படுத்தி இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் சாலை வழிச் சரக்குப் போக்குவரத்தின் ஒரு பகுதியை ரயில் போக்குவரத்துக்கு மாற்றும் அரசாங்கத்தின் ‘Road-to-Rail’ திட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்படும்.

பாசிர் கூடாங் முனையம்: ஆண்டுக்கு 1,12,500 லாரிப் பயணங்களைக் குறைக்கும் வாய்ப்பு

2026 ஜூன் 22ஆம் தேதி செயல்பாட்டைத் தொடங்கிய பாசிர் கூடாங் சரக்கு மைய முனையம், தீபகற்ப மலேசியாவின் தெற்குப் பகுதியில் ரயில் வழித் தளவாட வலையமைப்பை வலுப்படுத்தும் முக்கிய வசதிகளில் ஒன்றாகும்.

இந்த முனையம் ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் இருபது அடி சரக்கு கொள்கலன் அலகுகளை (TEU) கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கொள்ளளவின் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,12,500 லாரிப் பயணங்களைக் குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல், கார்பன் வெளியேற்றம் மற்றும் சாலை உள்கட்டமைப்பின் மீதான அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்க வாய்ப்பு ஏற்படும்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், அதிக அளவிலான சரக்குகளை ரயில் மூலம் எடுத்துச் செல்வது தளவாடச் செயல்திறனை உயர்த்தவும், தொழில்துறையினருக்கு நிலையான போக்குவரத்து மாற்றை வழங்கவும் உதவும்.

கெம்பாஸ் பாரு–பாசிர் கூடாங் ரயில் வலையமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பது இந்த முனையத்தின் முக்கியச் சிறப்பாகும். இதன் மூலம் பாசிர் கூடாங் சுற்றுவட்டாரத் தொழில்துறை மற்றும் தளவாடப் பகுதிகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதி மேம்படும்.

தாப்பா முனையம் ரயில் சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தும்

பாசிர் கூடாங் முனையத்தைத் தவிர, 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பேராக் மாநிலத்தின் தாப்பா சரக்கு மைய முனையமும் RAC உடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ் தொடர்ந்து செயல்படும்.

உற்பத்திப் பகுதிகள், தளவாட மையங்கள் மற்றும் முக்கியச் சரக்குச் சந்தைகளுக்கு இடையே, குறிப்பாக நீண்ட தூரங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதில் இந்த முனையம் ரயில் போக்குவரத்துக்கான மாற்று வசதியை வழங்குகிறது.

ஏற்கெனவே உள்ள ரயில் வலையமைப்புடன் இம்முனையம் இணைக்கப்பட்டிருப்பது, தொழில்துறையினருக்குக் கூடுதல் போக்குவரத்துத் தேர்வுகளை வழங்குவதுடன் சாலைப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.

தனியார் துறையின் நிபுணத்துவம், முதலீடு மற்றும் செயல்பாட்டுத் திறன்களைப் பயன்படுத்தி நாட்டின் ரயில் சரக்குப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்த ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுகிறது.

ஆறு சரக்கு மைய முனையங்கள் மூலம் KTMB வருவாயை அதிகரிக்கத் திட்டம்

புதிய சரக்கு மைய முனையங்களின் மேம்பாடு, முக்கியத் தொழில்துறைப் பகுதிகளுக்கான ரயில் இணைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் மலேசிய ரயில்வே நிறுவனமான KTMB-யின் செயல்பாட்டுத் திறனையும் சரக்குச் சேவை வருவாயையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KTMB-யின் வருவாய் தற்போது RM14.25 மில்லியனாகவும், ஆண்டுக்கு 855 பிளாக் ரயில் பயணங்களுடனும் உள்ள நிலையில், 2031ஆம் ஆண்டுக்குள் RM52.89 மில்லியனாகவும், 2,416 பிளாக் ரயில் பயணங்களாகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிளாக் ரயில் பயணத்திலும் 40 முதல் 50 சரக்கு ரயில் பெட்டிகள் இடம்பெறும். இது சுமார் 80 முதல் 100 TEU சரக்குக் கொள்கலன்களைக் கையாளும் திறனுக்குச் சமமாகும்.

பாசிர் கூடாங் மற்றும் தாப்பாவைத் தவிர, மேலும் ஐந்து இடங்களில் கட்டம் கட்டமாக சரக்கு மைய முனையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவை:

  • ஜொகூரில் மெங்கிபோல்
  • மலாக்காவில் புலாவ் செபாங்
  • கிளந்தானில் கோத்தா பாரு
  • பேராக்கில் பத்து காஜா
  • பேராக்கில் பெஹ்ராங்

இந்த ஆறு முனையங்களும் முழுமையாக மேம்படுத்தப்பட்ட பின்னர், ஆண்டுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான TEU சரக்குகளைக் கையாளவும், சாலைகளில் சுமார் 7 லட்சம் லாரிப் பயணங்களைக் குறைக்கவும் வாய்ப்புள்ளதாக RAC தெரிவித்துள்ளது.

இந்த முனையங்களில் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான வசதிகள், ரயில் பாதை இணைப்புகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் அட்டவணை மற்றும் நகர்வுகளைக் கண்காணிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நிறுவப்படும்.

வெளிப்படையான தேர்வு முறையில் Infinity நிறுவனம் தேர்வு

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக RAC திறந்த முன்மொழிவுக் கோரிக்கை (RFP) முறையை நடத்தியது.

சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் தொழில்நுட்பத் திறன், வணிகச் சாத்தியக்கூறு மற்றும் முன்மொழியப்பட்ட வணிக மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் முனையங்களின் மேம்பாடு மற்றும் செயல்பாட்டுக்குச் சிறந்த தீர்வை வழங்கிய நிறுவனமாக Infinity Logistics & Transport தேர்வு செய்யப்பட்டது.

தனியார் துறையுடன் இணைந்து செயல்படுவது, ரயில்வே நிலம் மற்றும் உள்கட்டமைப்புகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தளவாட வசதிகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் RAC பின்பற்றும் முக்கிய உத்திகளில் ஒன்றாகும்.

ஒப்பந்தத்தின் வரம்புகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சரக்கு மைய முனையங்களின் மேம்பாடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் தனியார் துறையின் அனுபவத்தையும் திறன்களையும் பயன்படுத்த முடியும் என RAC தெரிவித்துள்ளது.

திறந்த RFP முறையில் Infinity தேர்வு செய்யப்பட்டிருப்பது, நல்ல நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் வணிகச் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் பங்காளிகளைத் தேர்ந்தெடுப்பதில் RAC கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்திலிருந்து ரயில் போக்குவரத்துக்கு மாற்றம்

தற்போது மலேசியாவின் உள்நாட்டுச் சரக்குப் போக்குவரத்து பெருமளவில் சாலை வழிப் போக்குவரத்தையே சார்ந்துள்ளது. இதனால் சாலைகளின் கொள்ளளவு மீதான அழுத்தம் அதிகரிப்பதுடன், தளவாடச் செலவுகள், கார்பன் வெளியேற்றம் மற்றும் சாலைப் பாதுகாப்புச் சவால்களும் அதிகரிக்கக்கூடும்.

இந்நிலையில், சரக்கு மைய முனையங்களை உருவாக்குவது போக்குவரத்து அமைச்சின் ‘Road-to-Rail’ திட்டத்திற்கும், 2019–2030 தேசிய போக்குவரத்துக் கொள்கையின் இலக்குகளுக்கும் ஆதரவளிக்கும் முக்கிய நடவடிக்கையாகும்.

இதனுடன், நாட்டின் ரயில் சரக்குப் போக்குவரத்துத் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் RAC-யின் Rolling Stock Strategy (RSS) திட்டமும் இணைந்து செயல்படுகிறது. இந்தத் திட்டத்தில் 44 ரயில் எஞ்சின்களும் 246 சரக்கு ரயில் பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக, தனியார் துறையுடனான மூலோபாய ஒத்துழைப்பின் மூலம் சரக்கு மைய முனையங்களை மேம்படுத்துவது, ரயில்வே சொத்துகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், தொழில்துறைப் பகுதிகள், தளவாட மையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு இடையிலான இணைப்புகளை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சிகள் திறமையான, போட்டித்தன்மை மிக்க, பாதுகாப்பான மற்றும் நிலையான சரக்குப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தளவாட வலையமைப்பின் போட்டித்திறனுக்கும் ஆதரவளிக்கும் என்று RAC தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular