Monday, October 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கை கொடுப்போம் தீபாவளி கலை இரவு 2026

ஒற்றுமையுடன் தீபாவளியைக் கொண்டாடி, தேவையுடைய குடும்பங்களின் இல்லங்களில் மகிழ்ச்சியை மலரச் செய்த நிகழ்வு

மலேசிய இந்து சங்கம், ஸ்கூடாய் பேரவை, தாமான் யூனிவர்சிட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பக்தி ஜெயா சமூகநல இயக்கம், செஜாத்ரா சமூகநல இயக்கம் மற்றும் மஇகா தாமான் யூனிவர்சிட்டி செலாத்தான் கிளை ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், ‘கை கொடுப்போம் தீபாவளி கலை இரவு 2026’ நிகழ்வு 17-10-2026 அன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்குத் தாமான் புலாய் உத்தாமா மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில மஇகா தலைவரும் கெமிலா சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு கே. இரவின்குமார் கிருஷ்ணசாமி, முன்னாள் மாநில மஇகா தலைவரும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத் தலைவருமான மதிப்புமிகு டத்தோ கே. எஸ். பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எம். சாமி, இஸ்கந்தர் புத்ரி மஇகா தொகுதித் தலைவர் உயர்திரு சங்கரபாண்டியன் உள்ளிட்ட ம இ கா கிளைத் தலைவர்கள் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்தனர்.

நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு கே. இரவின்குமார் கிருஷ்ணசாமி அவர்கள், இந்தியர் நலன் சார்ந்த பல்வேறு இயக்கங்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும்போது, அவை சிறப்பாக அமைவதுடன் அதிகமான மக்களை ஒன்றிணைக்கும் வலிமையையும் பெறுகின்றன என்று குறிப்பிட்டார்.

ஒற்றுமையே நமது பலம் என்பதை உணர்ந்து, கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து தீபாவளி கலை இரவை நடத்தி, தேவையுடைய குடும்பங்களுக்கு அன்பளிப்புகளையும் தீபாவளிப் பொருட்களையும் வழங்கி வரும் அமைப்புகளின் சேவையை அவர் பாராட்டினார். இந்தச் சேவைப் பயணம் தொடர்ந்து சிறப்புடன் வளர்ந்து, சம்பந்தப்பட்ட அமைப்புகள் தங்களின் 50ஆம் ஆண்டு விழாவையும் கொண்டாட வேண்டும் எனத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இந்தியச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு கல்வியே வலிமையான ஆயுதம் என வலியுறுத்திய அவர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்தி, அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையத் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக, உதவி தேவைப்படும் B40 பிரிவைச் சேர்ந்த 55 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தீபாவளிப் பொருட்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

மேலும், தாமான் யூனிவர்சிட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் சார்பில் ஒவ்வொரு பயனாளிக் குடும்பத்திற்கும் ரிம 100 மதிப்பிலான தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது. பண்டிகைக் காலத்தில் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் துணை நிற்பதுடன், அவர்களும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்ற மனிதநேய நோக்கத்தை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது.

சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் தங்களின் பங்களிப்பை வழங்கி வரும் மூத்த நண்பன் நாளிதழ் நிருபர் திரு. வள்ளுவன், தொழிலதிபர்கள் திரு. எம். டி. கே. குமரன், திரு. ரூபன் மற்றும் கராத்தே துறையில் சிறந்து விளங்கும் இரு மாணவர்கள் ஆகியோர் நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.

நிகழ்வின் கலைப் பகுதிக்கு மேலும் மெருகூட்டும் வகையில், தாரணி இசைக்குழுவின் இனிய மெல்லிசைப் பாடல்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. நிரித்தோதையா நடனமணிகளின் அழகிய நடன நிகழ்ச்சிகளும் அரங்கில் இருந்தவர்களைப் பரவசப்படுத்தின.

வருகை தந்த அனைவருக்கும் லீலா கேட்டரிங் சார்பில் உணவும், சுமா டிலைட்ஸ் சார்பில் சுவையான செண்டோலும் வழங்கப்பட்டன.

சமய அமைப்புகள், சமூகநல இயக்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் இணைந்து செயல்பட்டால், சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தகுந்த உதவிகளை வழங்க முடியும் என்பதற்கு ‘கை கொடுப்போம் தீபாவளி கலை இரவு 2026’ சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

தீபாவளியின் உண்மையான மகிழ்ச்சி நம்முடன் இருப்பவர்களிடம் மட்டுமல்லாமல், உதவி தேவைப்படும் குடும்பங்களிடமும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையை முன்னிறுத்திய இந்நிகழ்வு, சமூக ஒற்றுமை, மனிதநேயம், கலை மற்றும் சேவை ஆகியவற்றை ஒரே மேடையில் இணைத்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular