Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய மாதக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கூலாயில் ‘இரும்புத் தோட்டம்’ திரைப்பட சிறப்புக் காட்சி.

கூலாய் ஆக 26

தேசிய மாதக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் முயற்சியில் மலேசியத் தமிழ் திரைப்படமான ‘இரும்புத் தோட்டம்’ சிறப்புக் காட்சி கூலாய் வாழ் மக்களுக்காக இலவசமாகத் திரையிடப்பட்டது.

மலேசியத் தமிழ் திரைப்படத் துறை கலைஞர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தியோ குறிப்பிட்டார்.

“இந்தத் திரைப்படக் குழுவின் படைப்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். மலேசியத் திரையுலகம் அனைத்துலகத் திரைப்படங்களுக்கு நிகரான தரமான படைப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது.” என்றார்.

தொடர்பு துணையமைச்சருமான தியோ, உள்ளூர் திரைப்படங்களுக்கு நாம் ஆதரவளிக்கும்போது, ஒரு திரைப்படத்தை மட்டும் ரசிப்பதில்லை, நமது கலைஞர்களின் திறமை, முயற்சி மற்றும் கனவுகளுக்கும் ஆதரவளிக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, கூலாய் ஈயோன் பேரங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திரைப்படத்தின் முன்னணி கலைஞர்களான இர்ஃபான் ஸைனி, கே.எஸ். மணியம், ஆர். மோகன ராஜ், தினி சுந்தர் மற்றும் தயாரிப்பாளர் ஜெகன் ஜோன் பீட்டர் ஆகியோர் கூலாய் மக்களுடன் இணைந்து திரைப்படத்தைக் கண்டுகளித்ததுடன், ரசிகர்களுடன் கலந்துரையாடியும் மகிழ்ந்தனர்.

துணையமைச்சர் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு திரைப்படக் கலைஞர்களும், தயாரிப்புக் குழுவினரும் வரவேற்பு தெரிவித்தனர். உள்ளூர் படைப்புகளுக்கு மக்களிடம் நேரடியாகச் சென்று சேரும் வாய்ப்பை ஏற்படுத்தியதுடன், மலேசியத் திரைப்படக் கலைஞர்களின் திறமைகளை பரந்த அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த முயற்சி உதவுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

‘இரும்புத் தோட்டம்’ மலேசியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் குற்றப் புலனாய்வு திரைப்படமாகும். கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியீடு கண்ட இத்திரைப்படம், மலேசிய தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகமான (ஃபினாஸ்) வழங்கும் முதல் முறையாகத் திரைப்படம் உருவாக்கும் புதிய படைப்பாளிகளுக்கான நிதியுதவியும் பெற்றுள்ளது.

தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற இச்சிறப்புக் காட்சியில் திரைப்படத்தைக் காண வந்த மக்களுக்கு தேசியக் கொடிகளும் வழங்கப்பட்டன. மேலும், செனாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் போர் யாங் மற்றும் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. கார்த்தியாயினி ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular