Monday, November 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

2027 ஜூன் மாதத்திற்குப் பிறகே உலகளாவிய குறைந்தபட்ச வரி வருவாய் கிடைக்கும்!

கோலாலம்பூர், நவ 23

உலகளாவிய குறைந்தபட்ச வரி (Global Minimum Tax – GMT) விதிமுறைகள் ஏற்கெனவே அமலுக்கு வந்திருந்தாலும், மலேசியா 2027 ஜூன் மாதத்திற்குப் பிறகே அதிலிருந்து வரி வருவாயைப் பெறத் தொடங்கும் என்று துணை நிதியமைச்சர் லியூ சின் தோங் இன்று தெரிவித்தார்.

பல்தேசிய நிறுவனங்களின் நிதி அறிக்கை காலங்களின் அடிப்படையிலேயே இந்தக் கூடுதல் வரி வசூலிக்கப்படும் காலம் தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கை காலம் முடிவடைந்த பின்னர் 18 மாதங்களுக்குப் பிறகே வரி அறிக்கையைத் தாக்கல் செய்து வரியைச் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் விளக்கினார்.

2025ஆம் ஆண்டு GMT அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை எவ்வளவு வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும், உள்ளூர் நிறுவனங்களைப் பாதிக்காமல் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 15 விழுக்காடாகக் குறைக்க முடியுமா என்றும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கு லியூ பதிலளித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECD தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலகளாவிய குறைந்தபட்ச வரி சீர்திருத்தம், ஆண்டுக்கு குறைந்தது 750 மில்லியன் யூரோ உலகளாவிய வருவாய் ஈட்டும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் செயல்படும் பல்தேசிய நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

வரி ஏய்ப்பு மற்றும் இலாபத்தை வரி குறைவான நாடுகளுக்கு மாற்றுவதைத் தடுப்பதுடன், நாடுகளுக்கு இடையிலான வரிப் போட்டியைக் கட்டுப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

ஒரு நாட்டில் நிறுவனத்தின் உண்மையான வரி விகிதம் 15 விழுக்காட்டுக்குக் குறைவாக இருந்தால், அந்த வித்தியாசத்தை ஈடுசெய்ய கூடுதல் வரி (Top-up Tax) விதிக்கப்படும்.

மலேசியாவில் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த வரி, 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

வெளிநாட்டு முதலீடுகளுக்கான வரிச் சலுகைகள்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள் தொடர்பான கவலைகளுக்குப் பதிலளித்த லியூ, முதலீட்டு ஊக்குவிப்புகளை வழங்குவதற்கான நிபந்தனைகளை கடுமையாக்கும் நோக்கில் புதிய ஊக்குவிப்பு கட்டமைப்பு (New Incentive Framework) இவ்வாண்டு மார்ச் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

இதன்படி, முதலீடுகள் ஆறு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவற்றில் பொருளாதார சிக்கல்தன்மை (Economic Complexity) மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான முன்னுரிமை ஆகியவையும் அடங்கும்.

“உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று, நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் முதலீடுகளுக்கு மட்டுமே ஊக்குவிப்புகள் வழங்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வரி விடுமுறைகள் (Tax Holidays), உள்நாட்டு தொழில்துறைகளைப் பாதிக்கக்கூடும் என்று லிம் குவான் எங் கவலை தெரிவித்திருந்தார்.

மேலும், மலேசியாவின் எஃகுத் தொழில்துறையில் உள்ளூர் நிறுவனங்களின் பங்கு 2016ஆம் ஆண்டில் 85 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது 15 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும், Malaysia Steel Works (KL) Bhd (MA Steel) நிறுவனம் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் லிம் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular