Monday, November 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எஃப்.எஃப்.எம் 35 : உள்ளூர் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ!

கோலாலம்பூர்,நவ 23

மலேசியத் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள், 35ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் (எஃப்.எஃப்.எம் 35) நான்கு விருதுகள் பெற்றுள்ளதைப் பாராட்டிய தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங், இது உள்ளூர் தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு அங்கீகாரங்களில், ‘மச்சாய்’ (Macai) திரைப்படத்திற்காக சஞ்சேய் பெருமாள் மற்றும் சிவானந்தம் ஆகியோர் சிறந்த அசல் கதை விருதைப் பெற்றனர். அதே திரைப்படத்தில் நடித்த குபேன் மகாதேவன், முதல் முறையாக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

மேலும், திரைப்படத் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய பங்களிப்பையும், அனுபவத்தையும் அங்கீகரிக்கும் வகையில், சுகன் பஞ்சாச்சரம் என்று பரவலாக அறியப்படும் பஞ்சாச்சரம் பி. நல்லையாவுக்கு சிறப்புக் கலைஞர் விருது வழங்கப்பட்டது.

இதற்கிடையில், சஞ்சேய் பெருமாள் எழுதி, இயக்கிய ப்ளூஸ் (Blues) திரைப்படத்திற்காக சிறந்த திரைப்படச் சுவரொட்டி விருதை ஸ்கைசென் ஸ்டுடியோஸ் (Skyzen Studios) பெற்றது.

“இந்த அங்கீகாரங்கள் தனிநபர் அல்லது ஒரு திரைப்படத் தயாரிப்புக் குழுவின் வெற்றியாக மட்டும் பார்க்கப்படக் கூடாது. உள்ளூர் தமிழ் திரைப்படத் துறையில் திறமைகள், படைப்பாற்றல் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கான மிகப்பெரிய ஆற்றல் இருப்பதை இது நிரூபிக்கிறது.

“இந்த வெற்றி, மேலும் பல கலைஞர்கள் தரமான படைப்புகளை உருவாக்குவதற்கும், நாட்டின் கலைத் துறையின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து பங்களிப்பதற்கும் உந்துசக்தியாக அமையும் என நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் திரைப்பட விழாவில், கடம் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றதுடன், படைப்பாக்க உள்ளடக்க நிதி திட்டத்தின் கீழ் ரி.ம.1 மில்லியன் ஊக்கத்தொகை உட்பட மொத்தம் 10 விருதுகளை வென்று விழாவில் ஆதிக்கம் செலுத்தியது.

கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ, விருதுகளை வென்ற அனைவருக்கும் தனது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், நாட்டின் திரைப்படத் துறைக்கு தொடர்ந்து பங்களித்து வரும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular