Tuesday, October 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய சமூகத்திற்கான புதிய திட்டங்கள் அமைச்சரவையில் விவாதம்: சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர், அக். 27 –
மலேசிய இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், சிறு வணிகர்களுக்கான நிதியுதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ள சிறப்பு முயற்சிகள், புதிய அறிவிப்புகள் தொடர்பான விவரங்களை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.

புத்ராஜெயாவிலுள்ள தமது அமைச்சின் தலைமையகத்தில், இந்திய சமூக வழிபாட்டுத் தலங்களுக்கான மித்ரா மானியத்தை எடுத்து வழங்கிய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன், சிறு வணிகர்களுக்கு ஆதரவளித்தல், வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை வளர்த்தல், சமூக நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறு வணிகங்களை நடத்தும் பி40 வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மித்ராவின் உயர்வு மடானி வணிக நிதியுதவி வழங்குவது தொடர்பாக இதுவரை சுமார் 8,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் முதல், இரண்டாம் கட்டங்களைச் சேர்த்து சுமார் 1,100 முதல் 1,150 விண்ணப்பதாரர்களுக்கு உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தகுதியான ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் சுமார் 20,000 ரிங்கிட் முதல் 30,000 ரிங்கிட் வரை நிதியுதவி வழங்குவது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வழக்கமான நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு வணிகர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக, சிறு வணிகர்களுக்கான நிதி உதவிகளை விரிவுபடுத்தும் நோக்கில் அமனா இக்தியார் மலேசியா, தெக்குன் நேஷனல் போன்ற நிறுவனங்கள் வாயிலாக உதவிகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன என்று டத்தோஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

நிதியுதவி பெறும் வணிகர்கள் தங்களது தொழில்களை நிலைநிறுத்தி, தொடர்ந்து வளர்ச்சியடைய உதவும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் வணிகர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்திய சமூகத்தினருக்கான திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பினாங்கு, செபராங் பிறை பகுதிகளில் உள்ள சமூகத்தினருக்குத் தேவையான தொழில்திறன் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பினாங்கு மாநிலத்தில் 40,000 திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் இலக்குடன் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பினாங்கு துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உள்ளிட்ட தலைவர்களும் பங்களித்து வருகின்றனர் என்று டத்தோஶ்ரீ ரமணன் சொன்னார்.

மற்றொரு முக்கிய முயற்சியாக, நாடு முழுவதும் உள்ள இந்திய சமூகத்தின் வழிபாட்டுத் தலங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

தர்மா மடானி, ஹார்மோனி மடானி திட்டங்களின் கீழ், 164 வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 3.28 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 95 இந்து ஆலயங்களுக்கு 1.9 மில்லியன் ரிங்கிட்டுன், 57 சீக்கிய குருத்வாராக்கள், 12 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு 1.38 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தர்மா மடானி திட்டத்தின் கீழ் இதுவரை 771 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 15.42 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று டத்தோஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular